/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் கலெக்டர்... எச்சரிக்கைகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் கலெக்டர்... எச்சரிக்கை
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் கலெக்டர்... எச்சரிக்கை
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் கலெக்டர்... எச்சரிக்கை
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் கலெக்டர்... எச்சரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 05:28 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி நிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் ஆண்டுதோறும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழை காலங்களில் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் விரைவில் தென்மேற்கு பருவ மழை துவங்க இருப்பதால் நிலங்களில் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையொட்டி தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மா, கொய்யா மற்றும் இதர பழப்பயிர்களின் மரங்களில் காய்ந்த மற்றும் பட்டுபோன கிளைகளை அகற்றி கவாத்து செய்ய வேண்டும்.
மரத்தின் சுமையை குறைப்பதன் மூலம் மழை மற்றும் புயல் காற்றிலிருந்து பாதுகாக்கலாம். மழை நீர் தேங்கும் நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை நீர் வெளியேறிய பின்னர் அடி உரமிட்டு மரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
பசுமைக் குடில் அமைத்துள்ள விவசாயிகள் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். குடிலின் உட்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும். பசுமை குடிலின் கட்டுமானத்தின் கிளிப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.
அதேபோல் பல ஆண்டு பயிர்களான மா, பலா, முந்திரி, கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகிவற்றில் காய்ந்த மற்றும் பட்டுபோன கிளைகளை அகற்றிட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைக்க வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் துார்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.
கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின், உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது வயல்களில் அதிக நீர் தேங்காதபடி வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகிவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
பருவ மழையில் தோட்டக்லை பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகள், தங்களது வயல்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாத்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.