/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பாதுகாப்பு பணியில் 690 போலீசார்... குவிப்பு; தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்பாதுகாப்பு பணியில் 690 போலீசார்... குவிப்பு; தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்
பாதுகாப்பு பணியில் 690 போலீசார்... குவிப்பு; தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்
பாதுகாப்பு பணியில் 690 போலீசார்... குவிப்பு; தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்
பாதுகாப்பு பணியில் 690 போலீசார்... குவிப்பு; தயார் நிலையில் ஓட்டு எண்ணும் மையம்
ADDED : ஜூன் 04, 2024 05:12 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படும் நிலையில், பாதுகாப்பு பணியில்690 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்துார் (தனி), கெங்கைவல்லி (தனி), ஏற்காடு (எஸ்.டி.,) ஆகிய 3 தொகுதிகள் என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தொகுதியில், 1,803 ஓட்டுச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
தேர்தலில், தி.மு.க., மலையரசன், அ.தி.மு.க., குமரகுரு, பா.ம.க., தேவதாஸ், நாம் தமிழர் கட்சி ஜெகதீசன் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில், 5 லட்சத்து 98 ஆயிரத்து 501 ஆண், 6 லட்சத்து 44 ஆயிரத்து 33 பெண், 63 மூன்றாம் பாலினத்தவர்கள் என 12 லட்சத்து 42 ஆயிரத்து 597 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 79.21 சதவீத ஓட்டுக்களுடன் மாநில அளவில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி இரண்டாமிடத்தை பிடித்தது.
தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுாரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில் 45 நாட்களுக்கு பிறகு ஓட்டு எண்ணிக்கை இன்று 4ம் தேதி நடக்கிறது. இதில், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்காக 6 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக, சட்டசபை தொகுதி வாரியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் 305 ஓட்டுச்சாவடி மையங்களில் பதிவான 2,12,015 ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், சங்கராபுரம் தொகுதியில் 300 ஓட்டுச்சாவடிகளில் பதிவான 2,09,966 ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் 332 ஓட்டுச்சாவடிகளில் பதிவான 2,25,310 ஓட்டுக்கள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்படும்.
அதேபோல், கெங்கவல்லி (தனி) சட்டசபை தொகுதியில் 264 ஓட்டுச்சாவடி மையங்களில் பதிவான 1,76,494 ஓட்டுக்கள் 19 சுற்றுகளாகவும், ஆத்துார் (தனி) தொகுதியில் 284 ஓட்டுச்சாவடிகளில் பதிவான 1,89,243 ஓட்டுகள் 21 சுற்றுகளாகவும், ஏற்காடு(எஸ்.டி) தொகுதியில் 318 ஓட்டுச்சாவடிகளில் பதிவான 2,29,569 ஓட்டுகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படுகிறது.
ஓட்டு எண்ணும் மையத்திற்குள், 21 வேட்பாளர்கள், 21 முதன்மை ஏஜன்ட்டுகள், 1,048 ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில், 1 ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி.,க்கள், 21 இன்ஸ்பெக்டர்கள், 85 சப் இன்ஸ்பெக்டர்கள், 425 காவலர்கள், 30 ஆயுதப்படை போலீசார், 44 படாலியன் போலீசார், 24 மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள், 54 ஊர்க்காவல் படை வீரர்கள் என 690 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில் சட்டசபை தொகுதி வாரியாக முகவர்கள் அமரும் இடம், சுற்று வாரியாக அறிக்கை வெளியிடுவது, வேட்பாளர்கள் அறை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லுார்துசாமி, கீதா, பிரியதர்ஷினி, தனி தாசில்தார் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.