ADDED : ஜூன் 25, 2024 07:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் நேற்று மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்ட 223 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நேற்று முன்தினம்வரை 57 பேர் இறந்தனர். இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூர் கண்ணன் மகன் மணிகண்டன்,35; சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 112 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர், விழுப்புரத்தில் 4 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 157 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்த மெத்தனால் கலந்த ௨௦௦ லிட்டர் கள்ளச்சாராயத்தில் ஒரு பகுதியை நீதிமன்ற அனுமதி பெற்று, பகுப்பாய்விற்காக விழுப்புரம் தடயவியல் துறைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.