/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்
ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்
ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்
ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்
ADDED : ஜூன் 20, 2024 09:18 PM

கள்ளக்குறிச்சி: நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில், மெத்தனால் கலந்த சாராயம் குடித்து பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பார்வையிட்டு, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
அவர், கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த மக்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 133 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் சாராய விற்பனை நடந்துள்ளது. அதற்கு அருகே போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அலுவலர்களும் உள்ள பகுதியில் சாராய விற்பனை நடந்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியின் நிர்வாகத்தை எண்ணி பார்க்க வேண்டும். இச்சம்பவத்திற்கு பின், ஆளுங்கட்சியை சேர்ந்த, அதிகாரமிக்க கும்பல் உள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். அப்போது, தமிழகத்தில் அதிகமாக விற்பனையாகும் கள்ளச்சாராயத்தை குடித்து ஏழை, எளிய மக்கள் இறக்கிறார்கள், இரும்புக்கரம் கொண்டு சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என தெரிவித்தேன். அப்போதும், ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார பலமிக்கவரின் ஆதரவோடுதான் சாராய விற்பனை நடந்ததாக செய்தி வெளியானது.
முதல்வர் ஸ்டாலின், சாராயம் அருந்தி இறந்தவர்களின் நிலை பற்றி ஆராய சி.பி.சி.ஐ.டி., யிடம் ஒப்படைத்தார். ஆனால், இதுவரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. வீர வசனம் பேசி அறிவிப்பு வெளியிடுகிறார்கள். பிரச்னை முடிந்த பிறகு விட்டுவிடுகிறார்கள்.
கள்ளச்சாரயம் விற்பனை குறித்து அரசுக்கு தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர்கள் நேரு, சுப்ரமணியன் தெரிவித்தனர். ஆனால், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் எஸ்.பி.,க்கு போன் செய்து சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடப்பதாக தெரிவித்துள்ளார். அதன்மீது, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டசபையில் கடந்த 2023ம் ஆண்டு சபாநாயகரிடம் அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் தி.மு.க., அரசு எடுக்கவில்லை. தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. கள்ளச்சாரயம் ஆறுபோல ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் தி.மு.க., கவுன்சிலர் சாராயத்தை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்துள்ளார். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால், சம்மந்தப்பட்டவரை கைது செய்யாமல், அங்கு வேலை பார்த்த வடநாட்டு தொழிலாளர்களை கைது செய்து கண்துடைப்பு நாடகமாடுகின்றனர்.
நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர் துறக்க தி.மு.க., அரசு தான் காரணம்.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பணிக்காக ஒரு ஒன்றியத்திற்கு 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காக அமைச்சர் நியமித்து, சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கம். தி.மு.க., விற்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.
சாராயம் அருந்தியதால் தான் இறந்தததாக பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், வயிற்று போக்கு, வயது மூப்பு, வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கலெக்டர் நேற்று முன்தினம் தெரிவிக்கிறார். அரசுக்கு முட்டு கொடுக்கும், இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும்போது, ஏழை மக்களுக்கு எங்கே நீதி கிடைக்கும். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மருத்துவக்கருவிகள் இல்லை. குறிப்பாக, சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் இல்லை.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி இறந்துள்ளனர். பெற்றோரை இழந்து வாடும் அவரது 3 குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க., ஏற்கும். அவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கும். சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சத்தை உயர்த்தி, ரூ.25 லட்சமாக வழங்குவதுடன், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.