/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் அகற்றம்
ADDED : ஜூன் 02, 2024 02:27 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரியில் இருந்து காந்தி சாலை வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மே 16ல், ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டி, மின் இணைப்புகளை துண்டித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை அகற்றினர்.
மே 28ம் தேதி பொதுப்பணித்துறையினர் ஒரு டீக்கடை, இரண்டு மருந்து கடைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், 10 கடைகள் மட்டும் இடிக்கப்படவில்லை.
இந்நிலையில், காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் அகற்றப்படுவதாக நேற்று முன்தினம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில், சக்தி விநாயகர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவில்களை அகற்றும் பணி நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கியது. கோவில் நிர்வாகத்தினர் சுவாமி சிலைகளை அகற்ற அவகாசம் கேட்டனர். மேலும், கலெக்டரிடம் பேச்சு நடத்த வேண்டும். அதுவரை வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி கோவிலுக்குள் அமர்ந்தனர்.
அவகாசம் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்ததைத் தொடர்ந்து, கோவிலில் அமர்ந்திருந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
ஹிந்து முன்னணி, பா.ஜ., மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். பின், விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.