ADDED : ஜூலை 09, 2024 04:46 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 589 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை, வேளாண்மை, காவல், ஊரக வளார்ச்சி, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரம் உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பான கோரிக்கை மற்றும் புகார்கள் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை குறைபாடு உடைய 4 பேருக்கு 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவியும், பாம்பு கடித்து உயிரிழந்த வடகுறும்பூர் சுப்புலட்சுமி, அ.குறும்பூர் மலர், பாடியந்தல் பழனிசாமி, செல்லம்பட்டு சிவனேசன் கூரை வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த கிளாப்பாளையம் பூங்காவனம், நீரில் மூழ்கி உயிரிழந்த பல்லவாடி வெற்றிவேல் ஆகிய 6 பேருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லாத குழந்தைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2 குழந்தைகளுக்கு தலா 48 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, பழங்குடியின நல திட்ட அலுவலர் கவியரசு, மாவட்ட மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.