Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அண்டா உற்பத்தி மீண்டெழுமா

அண்டா உற்பத்தி மீண்டெழுமா

அண்டா உற்பத்தி மீண்டெழுமா

அண்டா உற்பத்தி மீண்டெழுமா

ADDED : பிப் 12, 2024 11:04 AM


Google News
அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாத்திர உற்பத்தி பட்டறைகளில் அண்டா உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட பட்டறைகளில் தட்டுமானம், கடச்சல், தொங்கு பட்டை ஆகிய மூன்று வகையான பித்தளை அண்டா, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்தது, 10 லிட்டர் முதல் அதிகபட்சமாக, 250 லீட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவிலான அண்டா உற்பத்தியாகிறது.

தேவைப்படுவோர் கொடுக்கும் ஆர்டருக்கேற்ப அந்தந்த உலோகங்களில் உயரம், எடைக்கேற்ப தகடை வளைத்து அண்டா உற்பத்தி செய்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர். தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் வருகிறது.

அண்டா உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது: தர மதிப்பீட்டில் திருப்பூர் அண்டாவுக்கென தனி மதிப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அண்டா உற்பத்தியில் நுாறு பட்டறை வரையும், ஒவ்வொன்றிலும் 50 பேர் வரையும் வேலை பார்த்து வந்தனர். இந்த நவீன அறிவியல் யுகத்தில், அண்டாவுக்கு மாற்றாக அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்கள் வரத்தால், அண்டா உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இப்போது, 20 பட்டறைகள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில், சமையல் செய்ய அதிக அளவில் அண்டாவை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த இடத்தை அலுமினியம் பிடித்து கொண்டது. அலுமினிய பாத்திரம் விலை குறைவாக கிடைப்பது ஒரு முக்கிய

காரணம்.

வீட்டு பயன்பாட்டுக்காக தண்ணீர் பிடித்து வைக்க அண்டாவை பயன்படுத்தினர். தற்போது, அதுவும் இல்லை. கிராமங்களில் நெல் வேக வைக்க பயன்படுத்தினர். இப்போது, அரிசி வாங்குவதால் வீடுகளில் நெல் அவிப்பதை தவிர்க்கின்றனர்; இதனால் அண்டாவை மறந்து விட்டனர். திருமணம், பொங்கல் பண்டிகைகளில் சீர் வரிசையில் அண்டா முக்கிய பங்கு வகித்தது. தற்போது அதுவும் இல்லை.

அண்டா தயாரிப்பு பணியில், பாலீஷ் செய்ய நைட்ரிக் ஆசிட், சல்பர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது கையில் பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அண்டா தயாரிப்பு பணிக்கு ஆட்கள் வருவதில்லை. தொழிலை மேம்படுத்த, மின்சார சலுகை வழங்க வேண்டும். மூல பொருட்களை கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசு குறைந்த விலையில் வழங்க வேண்டும். தொழிலில் நவீனத்தை ஏற்படுத்த அரசு கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us