Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் ரெடி: ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான்; கமிஷனர் திட்டவட்டம்

காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் ரெடி: ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான்; கமிஷனர் திட்டவட்டம்

காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் ரெடி: ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான்; கமிஷனர் திட்டவட்டம்

காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் ரெடி: ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான்; கமிஷனர் திட்டவட்டம்

ADDED : ஜன 06, 2024 07:28 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுகிறது.

இங்கு, 700க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்போது கடை வைத்துள்ளனர். இந்நிலையில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்காக, ஆர்.கே.வி., ரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில், 292 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, கடைகளை ஒதுக்குவது தொடர்பாக, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள், தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் பங்கேற்றனர். மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்கியவுடன் ''புதியதாக கட்டப்பட்டுள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், 292 கடைகள் உள்ளன. இவை சட்ட ரீதியாக, தகுந்த ஆவணங்களின்படி ஒதுக்கப்படும்,'' என்று, ஆணையாளர் தெரிவித்தார்.பின்னர் வியாபாரிகள் கூறியதாவது: நேதாஜி காய்கறி மார்க்கெட், 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். அனைத்து தரப்பு வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்க வேண்டும். இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஒரு வியாபாரிக்கு மூன்று முதல் நான்கு கடை ஒதுக்க வேண்டும். ஆனால், 292 கடைகள் மட்டுமே இருப்பதால், பிற வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எனவே மாநகராட்சியில், அனைத்து தரப்பு வியாபாரிகளும் பயன் பெறும் வகையிலும், ஒரே இடத்தில் காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடை, மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட்டை என ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டும். மாநகராட்சி தரப்பில் காய்கறி வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதற்கு பதிலளித்த ஆணையாளர், ''ஒரு வியாபாரிக்கு ஒரு கடை தான் ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, கலெக்டரிடம் ஆலோசித்து, ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us