Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்; தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்; தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்; தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்; தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

ADDED : ஜூன் 25, 2025 01:19 AM


Google News
காங்கேயம், பி.ஏ.பி., நீர் திருட்டை தவிர்க்க கோரி, வெள்ளகோவில் சுற்றுவட்டார விவசாயிகள், கால்நடைகளுடன் சென்று, பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட மேற்கொண்ட முயற்சியை, போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளுவால், ஓலப்பாளையம் பகுதி, போர்க்களம் போல் காட்சியளித்தது.

பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பாசன திட்டத்தில், வெள்ளகோவில், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகள் கடைமடையாக உள்ளன. ஏராளமான விவசாயிகள், இந்நீரை நம்பி விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில், 'வாய்க்காலில் திறந்து விடப்படும் நீர், கடைமடையை முழுமையாக வந்து சேர்வதில்லை' என, விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நீர் திருட்டு தடுப்பது தொடர்பான வழிகாட்டுதலையும் பெற்றுள்ளனர். இருப்பினும், நீர் திருட்டு தடுப்பது தொடர்பாக, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டத்தின் வாயிலாக, அரசின் கவனம் திருப்ப திட்டமிட்டனர். நேற்று காலை, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட விவசாயிகள், குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன், பெருந்திரளாக கிளம்பினர்.

பெண்களும் திரளமாக பங்கேற்றனர். காங்கேயம் - பகவதிபாளையம் பிரிவில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், விவசாயிகளை மேற்கொண்டு செல்லாதவாறு தடுத்தனர்.

இதில், விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், விவசாயிகளை, போலீசார் செய்தனர். விவசாயிகள் சிலரை குண்டுக்கட்டாக துாக்கிவந்து, வாகனங்களில் ஏற்றினர். அவர்களை ஊதியூர், காவலிபாளையம் பழனிமுருக பக்தர்கள் மண்டபத்தில், அமர வைத்தனர்.

இதனால், அப்பகுதி, போர்க்களம் போல காட்சியளித்தது. தள்ளுமுள்ளுவில் பிரியா, கோபால், பிரகாஷ், சாமிநாதன் உட்பட விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்; சிலர் மயக்கமடைந்தனர். அவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். தங்கள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை, மண்டபத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

மாடு முட்டி போலீசார் உள்பட 16 பேர் காயம்

பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடப்பதை தடுக்க கோரி, கோவை-திருச்சி நெடுஞ்சாலை பகவதிபாளையம் பிரிவு அருகே விவசாயிகள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குதிரை, மாடு, காளைகள் ஆகியவற்றை முன்னிறுத்தியிருந்தனர். மறியல் செய்ததால் விவசாயிகளை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட காளை மாடுகள் போலீசார் மீது முட்டியது. இதில் எஸ்.ஐ., அர்ஜுனன், எஸ்.ஐ., மோகன்ராஜ் உள்ளிட்ட எட்டு போலீசார், விவசாயிகள் சிலர் என, ௮ பேருக்கும் காயம் ஏற்பட்டது. அனைவரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us