/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளஸ் 2 மாணவன் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது பிளஸ் 2 மாணவன் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது
பிளஸ் 2 மாணவன் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது
பிளஸ் 2 மாணவன் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது
பிளஸ் 2 மாணவன் கொலை; சக மாணவர்கள் இருவர் கைது
ADDED : ஜூலை 04, 2025 07:18 AM

ஈரோடு; ஈரோடு அரசு பள்ளியில் மாணவியரிடம் பேசுவதில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டார். இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு, குமலன்குட்டை, செல்வம் நகரை சேர்ந்த கார்பெண்டர் சிவா - சத்யா தம்பதியின் மகன் ஆதித்யா, 17; குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி அருகே ஆதித்யா மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
சீருடையில் பள்ளிக்கு சென்ற ஆதித்யா, மயங்கி கிடந்தபோது சீருடையில் இல்லை. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தபோது, இதில், மாணவர்கள் தாக்கியதில், ஆதித்யா மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, உடன் பயிலும் சக மாணவர்கள் சிலரிடம் போலீசார் விசாரித்தனர்.
நேற்று காலை ஆதித்யாவின் பெற்றோர், உறவினர்கள் வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'ஆதித்யாவை, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த, 'சிசிடிவி' காட்சிகளை காட்ட வேண்டும். இரு மாணவர்களை மட்டும் விசாரிப்பதாக கூறுகிறீர்கள். ஆதித்யா காலையில் பள்ளிக்கு வராததை பெற்றோருக்கு தெரிவிக்காதது ஏன்?' என, கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடலை வாங்க மறுத்து ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.
வீரப்பன்சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, பெயர் குறிப்பிட்டு இரு மாணவர்கள் மற்றும் சில மாணவர்களை குற்றவாளிகளாக சேர்த்தனர். இதில், பெயர் குறிப்பிட்ட அந்த இரு மாணவர்களை மட்டும் கைது செய்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போலீசார் கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் மாணவியரிடம் பேசுவதில், மாணவர்களிடையே மோதல் இருந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன், தற்போது கைதான இரு மாணவர்கள் வகுப்பில் பயிலும் மாணவியரிடம் பேசக்கூடாது என, ஆதித்யாவை மிரட்டியுள்ளனர். இந்த பிரச்னையில் மாணவர்களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியில் நடந்த மோதலில், ஆதித்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடப்பதற்கு முன்னதாக, மாணவர்கள் தன்னை மிரட்டினர் என, ஆதித்யா, தன் தந்தை சிவாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஆதித்யாவின் தந்தை இதை தெரிவித்தார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், நேற்று மதியம் பள்ளியில் விசாரணையை துவக்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்களிடம் விசாரணை நடந்தது.