/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சியுடன் 46புதூர் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்புமாநகராட்சியுடன் 46புதூர் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு
மாநகராட்சியுடன் 46புதூர் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு
மாநகராட்சியுடன் 46புதூர் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு
மாநகராட்சியுடன் 46புதூர் பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2024 10:39 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா, 46 புதுார் பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஈரோடு அருகே உள்ள, 46புதுார் பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. தொழிலாளர் நலவாரிய உதவி ஆய்வாளர் பெரோஸ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள, 46 புதுார் பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வருவதால், அவ்வாறு இணைக்கக்கூடாது என பொதுமக்கள் மனு வழங்கினர். 46 புதுார் பஞ்சாயத்து, தொடர்ந்து பஞ்சாயத்தாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கினர்.
அம்மனுவில் கூறியதாவது: 46 புதுார் பஞ்சாயத்தில், 60 சதவீதம் விளை நிலங்களாக உள்ளது. இப்பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், 2,250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். இப்பகுதி முழுமையாக கிராமம் சார்ந்தும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் வசிக்கும் இடமாகவும் உள்ளது. மாநகராட்சியாக மாற்றப்பட்டால், 100 நாள் வேலை திட்டப்பணி நிறுத்தப்படும். பசுமை வீடுகள் கட்டும் பணி பாதிக்கும். குடிநீர், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயரும். காலி மனைகளின் விலை, வரி உயரும். எனவே மாநகராட்சியுடன் இப்பஞ்சாயத்தை இணைக்கக்கூடாது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்னை குறித்து ஈரோடு கலெக்டரை சந்தித்து, 46 புதுார் பஞ்சாயத்து மக்கள் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.