Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

ADDED : ஜன 28, 2024 10:29 AM


Google News
ரூ.86,000க்கு

தேங்காய் விற்பனை

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 8,679 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கிலோ தேங்காய், 23.16 ரூபாய் முதல், 28.40 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,452 கிலோ எடையுள்ள தேங்காய், 86,473 ரூபாய்க்கு விலை போனது.

ரூ.90 லட்சத்துக்கு

கொப்பரை ஏலம்

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 2,347 மூட்டைகளில், 1.09 லட்சம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 82.97 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 90.09 ரூபாய்க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக, 15.99 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 85.97 ரூபாய்க்கும் விற்பனையாயின. மொத்தம், 90 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

பயிர் மற்றும் பருப்பு வகைகள் விற்பனை 'டல்'

கோபி அருகே மொடச்சூரில், வாரந்தோறும் சனிக்கிழமை, பரும்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடுகிறது. இங்கு பருப்பு மற்றும் பயிர் ரகங்கள், சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை நடக்கிறது.

நேற்று கூடிய சந்தையில், துவரம் பருப்பு கிலோவில், 150 ரூபாய்க்கும், குண்டு உளுந்து மற்றும் பாசிப்பயிர் தலா, 140 ரூபாய், பாசிப்பருப்பு, 130 ரூபாய், மல்லி, 120 முதல், 140 ரூபாய், சீரகம், 550, கடுகு, 100, வெந்தயம், 95, கடலைப்பருப்பு, 90, புளி, 130 முதல், 220 ரூபாய் வரமிளகாய், 240, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 130, மிளகு, 750, பூண்டு, 300 முதல் 340 ரூபாய் வரை விற்பனையானது. மாசி மாதம் நெருங்கி வருவதால் வியாபாரம் மந்தமாக இருந்ததாகவும், வழக்கமாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கும்; தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு, பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனையாவதே அரிதாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

வரத்து குறைந்து வெல்லம் விலை உயர்வு

ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டிக்கு நேற்று வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து குறைந்து காணப்பட்டது. சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,300 ரூபாய் முதல், 1,380 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 1,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,380 ரூபாய் முதல், 1,460 ரூபாய்க்கு விலை போனது. அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,420 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட நேற்று வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து குறைந்து காணப்பட்டது. அதேநேரம், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் உயர்ந்தும், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் ஆகியவை மூட்டைக்கு, 30 ரூபாய் குறைந்தும் விற்பனையானது.

காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு ஓசூர், ராயக்கோட்டை, தாளவாடி, கர்நாடகா மாநிலம் கோலார் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் காலிபிளவர் விற்பனைக்கு வரத்தாகும். கடந்த சில நாட்களாக அறுவடை சீசன் துவங்கியதால், அதிகமாக வரத்தாகிறது. வீடுகள் மற்றும் காலிபிளவர் சில்லி தயாரிப்பு, கடைகளுக்காக அதிகமாக வாங்கி செல்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு மூட்டை காலிபிளவர், 500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரு மூட்டைக்கு மொத்த விலையில், 150 ரூபாய் விலை சரிந்து, 350 முதல், 300 ரூபாய் வரை தரத்துக்கு ஏற்ப விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ, 25 ரூபாய்க்கும், சிறிய பூ, 15, 20 ரூபாய்க்கும் விற்பனையானது.

மாணவர் வழிகாட்டியாளர் பணி

விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காமராஜ் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில் அறிவுசார் புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் கூடிய நுாலகம், கணினி வசதிகள், வகுப்பறைகள் உள்ளன. இம்மையத்தை பராமரிக்க வழிகாட்டியாளர் தேவைப்படுகிறது. விருப்பமுள்ள ஓய்வு பெற்ற கல்லுாரி விரிவுரையாளர்கள் மற்றும் நுாலகர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கவுரவ தொகையாக மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வழிகாட்டியாளர் பணிக்கான விண்ணப்பத்தை, 'கமிஷனர், ஈரோடு மாநகராட்சி, ஈரோடு' என்ற முகவரியில் வரும், 31 மாலை, 4:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கேட்டு கொண்டுள்ளார்.

அரசு கல்லுாரியில்

மாணவிக்கு பாராட்டு

காங்கேயம், ஜன. 28-

திருப்பூர் மாவட்ட அளவில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு பாடல் போட்டி நடந்தது. இதில் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லுாரி கணிதத்துறை மாணவி அம்மு முதலிடம் பெற்றார்.

மாணவிக்கு பாராட்டு சான்றிதழ், 2,000 ரூபாய் பரிசுத்தொகை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

இந்நிலையில் கல்லுாரியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கல்லுாரி முதல்வர் நசீம்ஜான், போராசிரியர்கள், மாணவிக்கு நேற்று பாராட்டு

தெரிவித்தனர்.

ரயில் மோதியதில்

முதியவர் பலி

ஈரோடு, ஜன. 28-

தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கும், ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ரயில் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்தவருக்கு, 80 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்பனை

இருவர் கைது

கோபி, ஜன. 28-

கவுந்தப்பாடி போலீசார், கண்ணாடிபுதுார் பகுதியில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது கவுந்தப்பாடியை சேர்ந்த, கார்த்திகேயன், 34, அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இதேபோல், கோபி அருகே கெட்டிச்செவியூர் பகுதியில், சிறுவலுார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, கோகுல்ராஜ், 29, அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.

குண்டும், குழியுமான சாலையால் அவதி

கோபி, ஜன. 28-

கோபி அருகே பவளமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை, குண்டும், குழியாக இருப்பதால், மக்கள் அவதியுறுகின்றனர்.

கோபி அருகே முருகன் புதுாரில் இருந்து, பவளமலை முருகன் கோவிலுக்கு செல்லும், பிரதான சாலை, குண்டும், குழியாக காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியே கோவிலுக்கு பாதசாரியாக செல்லும் பக்தர்கள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் அவ்வழியே பயணிப்போர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொல்லம்பாளையம்

மாரியம்மன் கோவில் விழா

ஈரோடு, ஜன. 28-

ஈரோடு கொல்லம்பாளையம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 25 இரவு, இரு கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

வரும், 30 மாலை 4:00 மணிக்கு கோவிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கிருந்து கரகம், தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

வரும், 31 காலை 6:00 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட உள்ளனர். பகல் 11:00 மணிக்கு அரண்மனை பூஜை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு கம்பங்கள் ஊர்வலம் நடக்கிறது. பிப்.,1ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

640 கிலோ ரேஷன் அரிசி

கடத்திய வாலிபர் கைது

பவானி, ஜன. 28-

பவானி அருகே வேனில், 640 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது

செய்தனர்.

பவானி, ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் நோக்கி சந்தேகப்படும்படியாக வந்த மாருதி ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 16 மூட்டைகளில், 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வேனில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல், 27, என்றும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 640 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர்.

புதிய கடைகள் கட்டுவதை

நிறுத்த கோரி வியாபாரிகள் மனு

ஈரோடு, ஜன. 28-

ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் புதிதாக கடைகள் அமைப்பதை நிறுத்தி வைக்க கோரி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாக(ஜவுளி வணிக வளாகம்) தென்புற கடைகள் ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயற்பொறியாளர் விஜயகுமாரிடம் அளித்த மனு:

ஈரோடு கனிமார்க்கெட்டில், மாநகராட்சி அறிவிப்பின் படி முன் வைப்பு தொகை மற்றும் ஓராண்டு வாடகை, மின்சார வைப்பு தொகை என எந்த ஒரு நிலுவையும் இல்லாமல் செலுத்தியுள்ளோம். இதன் மூலம் ஈரோடு மாநகராட்சி முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறோம். ஆனால், தற்போது கனிமார்க்கெட் வளாகத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி காலியிடத்தில் அமைக்கப்பட்டு வரும், 6 கடைகள் மூலம் எங்களது வியாபாரம் பாதிக்கும். எங்கள் கடைகளை மறைத்தாற்போல் கட்டப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்படும் கடைகளின் கட்டுமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும். தொடர்ந்து, நாங்கள் வியாபாரம் நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

சத்தியமங்கலம், ஜன. 28 -

சத்தியமங்கலத்தில் தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சத்தியமங்கலம் போலீசார் சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியில் கலந்து கொண்ட போலீசார் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

பைக் பேரணியை எஸ்.ஆர்.டி.,கார்னரில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி.,சரவணன் ,இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது எஸ்.ஆர்.டி.,கார்னரில் துவங்கி பவானி ஆற்றுப்பாலம்,வழியாக கோட்டுவீராம்ளையம்,மணிக்கூண்டு,வடக்குபேட்டையில் நிறைவு பெற்றது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

ரூ. 7.23 லட்சத்துக்கு

வேளாண் பொருட்கள் ஏலம்

பவானி, ஜன. 28-

பவானி அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 61 மூட்டை எள் வரத்தாகி, வெள்ளை ரகம் கிலோ, 137 முதல், 185 ரூபாய்க்கும், சிவப்பு ரகம் கிலோ, 102 முதல், 162 ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு கிலோ, 54 முதல் 70 ரூபாய்க்கும், துவரை கிலோ, 86 ரூபாய்க்கும், நிலக்கடலை கிலோ, 70 ரூபாய்க்கும் என மொத்தம், 7.23 லட்சம்

ரூபாயக்கு விற்பனையானது.

காய்கறி வியாபாரி

விபரீத முடிவு

ஈரோடு, ஜன. 28-

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காயத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். 3 நாட்களுக்கு முன்னர்

உறவினர்களை அழைத்து, 'புது மனை புகு விழா' நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் மனவேதனையுடன் செந்தில்குமார் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் செந்தில்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூங்கில் மரம் முறிந்து லாரி மீது விழுந்ததால்

ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம். ஜன. 28-

ஆசனுார் அருகே சாலையோர மூங்கில் மரம் முறிந்து லாரியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒன்றரை மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆசனுார் அருகே உள்ள மைசூர் செல்லும் சாலையில் அரேபாளையம் பிரிவு அருகில் நேற்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையோரமிருந்த மூங்கில் மரம் முறிந்து டிப்பர் லாரியின் மீது விழுந்ததால் லாரி விபத்துக்குள்ளானது. மைசூர் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் 4.கி.மீ.,துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

ஆசனுார் தீயணைப்பு துறையினர்,வனத்துறையினர் இணைந்து மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீராகி, தொடர்ந்து வாகனங்கள் சென்றன. சாலையோர மூங்கில் மரம் முறிந்து விழுந்ததில், 1:30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட குழாய்

வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

நம்பியூர், ஜன. 28-

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு மீனவர் காலனி அருகே பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.

நம்பியூர் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்துறை - கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் நாள்தோறும் கொடிவேரி அணை பகுதியில் இருந்து ராட்சத மின் மோட்டார் மூலமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு பெருந்துறை முழுவதும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் திட்ட பணியில் குழாய் இணைப்பு உள்ள இடங்களில் ஆங்காங்கே வால்வு பொருத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு மீனவர் காலனி அருகே பொருத்தப்பட்டு உள்ள குழாய் வால்வு நேற்று இரவு உடைந்தது. இதனால் குழாயில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறிய பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஓடி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. இரவு நேரத்தில் குழாய் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தெரியாத நிலையில் இன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் வால்வு உடைந்து குடிநீர் வீணாகி வருவதை கண்டு குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us