ADDED : ஜன 08, 2024 11:15 AM
மலை கிராமத்தில்
நலத்திட்ட உதவி
வெள்ளித்திருப்பூரை அடுத்த காக்காயனுார் மலை கிராமத்தில், போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு, பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மலைவாழ் மக்கள், 90 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, வேஷ்டி, சேலை மற்றும் 30 சிறுமிகளுக்கு சுடிதார் வழங்கப்பட்டது.
பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சின்னபிடாரியூரில் இன்று
கால்நடை மருத்துவ முகாம்
சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி சின்னபிடாரியூரில், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம், இன்று காலை, 8:௦௦ மணி முதல் நடக்கிறது.கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், தடுப்பூசி போடுதல், கோழி, ஆடுகளுக்கு நோய் தடுப்பு சிசிக்சை அளிக்கப்படும்.
வேலை வாய்ப்பு முகாம்85 நிறுவனம் பங்கேற்பு
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், அந்தியூரில் நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் ஆட்களை தேர்வு செய்ய, 85 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை முகாமில் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், பணி நியமன ஆணை வழங்கினார்.
அந்தியூர் அருகே விபத்தில்நகை மதிப்பீட்டாளர் பலி
அந்தியூர் அருகே அண்ணமார்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல், 32; தாமரைக்கரையில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு, யூனிகான் பைக்கில் வீட்டுக்கு திரும்பினார்.
அந்தியூர், ஜீவா செட் அருகே காந்தி நகரில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் வேன், பைக் நாளை ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் இயங்கிய சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின், அசையும் சொத்தான ஸ்வராஜ் வேன், ராஜராஜேஸ்வரி பவுல்ட்ரி நிறுவனத்தின் ஹீரோ ஹோண்டா பைக், நீதிமன்ற உத்தரவுப்படி நாளை காலை, 11:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பொது ஏலம் விடப்படுகிறது. இதற்கான விபரங்களை http:// www.erode.tn.nic.in/ இணையதளத்தில் பார்வையிடலாம்.
மவுன ஊர்வலமாக சென்று
விஜயகாந்துக்கு அஞ்சலி
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து கட்சியினர் சார்பில் அம்மாபேட்டையில் நேற்று மவுன ஊர்வலம் நடந்தது. இதில் தே.மு.தி.க.,- அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உட்பட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். அம்மாபேட்டை யூனியன் அலுவலகம் எதிரில் துவங்கிய ஊர்வலம், மேட்டூர் மெயின் ரோடு வழியாக சென்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் நிறைவடைந்தது.
அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு அனைவரும், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க., வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலம் வேலையால்
போக்குவரத்து நெரிசல்
அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி சுமைதாங்கியில், அந்தியூர் - பர்கூர் சாலையில், 1.50 கோடி மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 3 மீ., உயரம், 3 மீ., அகலத்தில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வாகனங்களுக்கு, ஜி.ஹெச்.கார்னர் பகுதி சாலை முன் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இருவழிப்பாதையில் ஒரு பாதை அடைக்கப்பட்டாலும், மாற்று பாதையில் வாகனங்கள் எதிரெதிரே செல்வதால், ஜி.ஹெச். கார்னர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'காளி வடிவில் மாறி பிரச்னையை
பெண்கள் எதிர்கொள்ள வேண்டும்'
புன்செய்புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில், பெண் அதிகாரம் என்ற நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி மாநில
ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:
குடும்ப பிரச்னையை கடந்து, பொருளாதாரத்தை முன்னெடுக்க தொழில் முனைவராக பெண்கள் வர வேண்டும். இதனால் குடும்பத்தில் பொருளாதாரத்தில் மேம்படும்போது பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். தொலைக்காட்சி தொடரை பார்த்து தொலைந்து போகாமல், பொருளாதாரத்தில் உயர, பெண்கள் சிறு தொழில் தொடங்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு எதிரான பிரச்னையில் அம்மன், காளி வடிவில் மாறி பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். சேமிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டு, பொருளாதாரத்தில் முன்னேறி அதிகாரத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சிலம்பாட்ட
திருவிழா
கோபியில் சிலம்பாட்டம் அமைப்பு சார்பில், கலைத்திருவிழா நேற்று நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
இதில் தேனி, மதுரை, சேலம், நாமக்கல், ஈரோடு என, 28 மாவட்டங்களை சேர்ந்த, சிலம்பாட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள், தங்களின்
திறமையை வெளிப்படுத்தினர்.
உலக முதலீட்டாளர் மாநாடு: பஸ் ஸ்டாண்டில் காணொலி
உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டு நிகழ்வுகளை மாணவர் மற்றும் தொழில் முனைவோர் அறிந்து பயன்பெறும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில், காணொலி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியை, கலெக்டர் மற்றும் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர்.செய்தி மக்கள் தொடர்பு துறை அதிநவீன மின்னணு வாகனத்தில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் கல்லுாரி, பள்ளிகளிலும், மாவட்ட தொழில் மையம் மற்றும் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திலும் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆஞ்சநேயர் கோவிலில்
ஜெயந்தி விழா ஏற்பாடு
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலில் நடப்பாண்டு அனுமன் ஜெயந்தி விழா, வரும், ௧௧ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவில் விழா ஏற்பாடு தொடங்கியுள்து.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தட்டிகள், பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்க, கோவிலுக்கு அருகில் உள்ள இடங்கள், மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்குமார், செயல் அலுவலர் ஜெயலதா செய்து வருகின்றனர்.
சுகாதார வளாகம்
ரூ.5 லட்சத்துக்கு ஏலம்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சி அடிவார பகுதியில், சிவசக்தி திருமண மண்டபம் அருகில், ஊராட்சிக்கு சொந்தமாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஏலம் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகம், ஊராட்சி செயலர் காளியம்மாள், கவுன்சிலர் சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிவன்மலையை சேர்ந்த பிரகாஷ், 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதற்கு ஜி.எஸ்.டி., கட்டணம், 18 சதவீதம். ஒப்பந்த காலம் ஒரு ஆண்டு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி.. தேர்வில்
2,154 பேர் ஆப்சென்ட்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான தேர்வு கடந்த 6, 7ல் ஈரோட்டில் ஆறு மையங்களில் நடந்தது. மொத்தம், 5,735 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 3,582 பேர் மட்டுமே எழுதினர். 2,154 பேர் புறக்கணித்து விட்டனர்.
போலீஸ்காரர் தற்கொலை
கோபி அருகே ஒட்டர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 35; நீலகிரி மாவட்டம் அரவங்காடு போலீஸ் ஸ்டேஷனில், முதல் நிலை காவலராக பணிபுரிந்தார். ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கடத்துார் போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த சசிக்குமாருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
கடலுார் மாவட்டம் கொல்லஞ்சாவடியை சேர்ந்தவர் ஜெயசீலன், 20; காங்கேயம் பகுதியில் தங்கி, இரண்டு மாதங்களாக, காங்கேயம் கார்மல் பள்ளியில் கட்டட வேலை செய்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால், மளிகை கடைக்கு மொபட்டில் சென்றார்.
பொருட்களை வாங்கிக்கொண்டு, மதியம், 3:00 மணியளவில், கரூர் சாலையில் வந்தார். அப்போது ஈச்சர் வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே இறந்து விட்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அத்தாணியில் ஆற்றில்
குளித்த இருவர் பலி
அத்தாணியில் பவானி ஆற்றில், நேற்று சிலர் ஆற்றில் குளிக்க வந்தனர். அதில் இருவர் நீண்ட நேரமாகியும் கரைக்கு வரவில்லை. இதனால் அவர்களுடன் வந்தவர்கள், அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியதில், அந்தியூர் காலனியை சேர்ந்த ஸ்ரீராம், 29; ஈசப்பாறையை சேர்ந்த தேவேந்திரன், 32, ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமியிடம் சில்மிஷம் முதியவர் போக்சோவில் கைது
கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 60, கூலி தொழிலாளி; இவர், 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ வழக்கில் ஜெகதீஸ்வரனை நேற்று கைது செய்தனர்.
ரூ.4.15 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூர் அருகே புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கதலி கிலோ, 30 ரூபாய்; நேந்திரம், 18 ரூபாய்; பூவன் தார், 360 ரூபாய்; செவ்வாழை தார், 670; ரஸ்தாளி தார், 440 ரூபாய்; மொந்தன் தார், 380 ரூபாய் என, 2,௦௦௦ வாழைத்தார் வரத்தாகி, 4.15 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
காங்கேயம் இன மாடுகள்
ரூ.23 லட்சத்துக்கு விற்பனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 105 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை விற்றன.
கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம், 60 கால் நடைகள், 23 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
மீன்கள் விலை உயர்வு
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு, தினமும் துாத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம், கேரளாவில் இருந்து, 25 டன் மீன் வரும். ஆனால், நேற்று வரத்து வெகுவாக குறைந்தது. 10 டன் மட்டுமே வந்தது.
இதனால் விலை, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த வாரம், 700 ரூபாய்க்கு விற்ற கருப்பு வாவல், 800 ரூபாய்-க்கு விற்றது. கிலோ, 600-க்கு விற்ற கடல் இறால், 700 ரூபாய்; 450-க்கு விற்ற ஊளி மீன், 500 ரூபாய்; 800 ரூபாய்-க்கு விற்கப்பட்ட சால்மன், 900 ரூபாய்; வெள்ளை வாவல், 900 ரூபாய்-க்கும் விற்றது.
இதேபோல் சங்கரா கிலோ-- 400, வஞ்சரம்-1000, அயிலை--250, மத்தி - 200, தேங்காய் பாறை-500, புளு நண்டு - 650, விளாமீன்-350, முரல்- 500, மயில் மீன்--700, திருக்கை-400, விலாங்கு மீன் - 350 ரூபாய்க்கு விற்றது.
வெங்காயம் விலை வீழ்ச்சி
ஈரோட்டில் வ.உ.சி., மைதானத்தில் செயல்படும் நேதாஜி தினசரி மார்க்கெட், நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட்டிலும் காய்கறிகள் சில்லரை, மொத்த விலையில் விற்கப்படுகிறது. இரு மார்க்கெட்டுகளுக்கும் சத்தி, பண்ணாரி, தாளவாடி, அறச்சலுார், பூந்துறை மற்றும் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தாகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, நாசிக், மைசூரு பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் வரத்தாகிறது. மார்க்கெட்டில் தினமும் சின்ன, பெரிய வெங்காயம், 150 டன் வரத்தாகும்.
இரு மாதங்களாக வரத்து குறைந்ததால், சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 80 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் கிலோ, ௫௦ ரூபாய்க்கும் விற்றது. தற்போது மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் தரத்துக்கு ஏற்ப 3 கிலோ 100 ரூபாய்; 4 கிலோ 100 ரூபாய்; பெரிய வெங்காயம் 4 கிலோ முதல் 5 கிலோ, 100 ரூபாய்க்கும் நேற்று விற்றது.
வீட்டருகே நின்ற சிறுவன் விபத்தில் பலி
அம்மாபேட்டை அருகேயுள்ள கோம்பூரை சேர்ந்த தம்பதி தினேஷ்குமார், 34; புவனேஸ்வரி, 32; அப்பகுதியில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் இலக்கியன், 12; அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை, 4:30 மணியளவில், வீட்டருகே சாலையோரம் இலக்கியன் நின்று கொண்டிருந்தான்.
அப்போது பவானியில் இருந்து மேட்டூர் பிரதான சாலையில், சபரிமலையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஸ்விப்ட் கார், கட்டுப்பாட்டை இழந்து இலக்கியன் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்தில் பலியானார்.
இறந்த இலக்கியன், அவனது பெற்றோர், தம்பி ஞானவேல் பாரதி ஆகிய நால்வரும், பழநி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளனர். அடுத்த வாரம் பாதயாத்திரை செல்லவிருந்த நிலையில், மகன் பலியானது, குடும்பத்தாரை மாளாத சோகத்தில் ஆழ்த்தியது.
பட்டப்பகலில் புகுந்த யானைகளை
பட்டாசு வெடித்து விரட்டிய மக்கள்
பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் நேற்று மாலை வெளியேறின. பவானிசாகர் அருகே பசுவபாளையம் வழியாக கொக்கரகுண்டி கிராமத்துக்குள் நுழைந்தன. விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானைகள், வாழை மற்றும் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தின.
இதைப்பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த வனத்துறையினருடம் விவசாயிகள், மக்கள் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் யானைக்கூட்டம் ஓட்டம் பிடித்தது. தொடர்ந்து யானைகளை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் ஈடுபட்டனர். பல கிலோ மீட்டர் துாரம் ஓடிய யானைகள், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.
'ரூ.6,603 கோடி மதிப்பில் ஒப்பந்தம்'
சென்னையில் நேற்று நடந்த 'உலக முதலீட்டாளர் மாநாடு -2024 நிகழ்ச்சிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் அதிக தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறு தொழில் நிறுவனங்கள் மூலம், 111.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 37 புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் மூலம், 6,374. 34 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடு மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், 117.40 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு, 6,603.24 கோடி ரூபாய் மதிப்பிலான, 439 புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் குடிநீர் கேட்டு, மக்கள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
ஈரோடு மாநகராட்சி ஞானபுரம், சி.எஸ். நகர், கனிராவுத்தர் குளம் பகுதிகளில், ஊராட்சி கோட்டை குடிநீர், சில வாரங்களாகவே 4, 5 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. அதுவும் குறைவான நேரமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சில நாட்களாக முழுமையாக நின்று விட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், 90க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு-மைசூரு சாலையில், போக்குவரத்து கடுமையாக பாதித்து, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வீரப்பன்சத்திரம் போலீசார், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், மாநகர தி.மு.க., செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.
பொதுமக்கள் கூறியதாவது: அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. சீரான இடைவெளியில் குடிநீர் வருவதில்லை. இப்பகுதியில் சாக்கடை, சாலை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு கூறினர். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, அரை மணி நேரத்துக்கு பின் சாலை மறியலை கைவிட்டனர்.