ADDED : ஜன 04, 2024 10:56 AM
விளை நிலங்களில்
புகுந்த யானைகள்
தாளவாடி அருகே மல்லன் குழியில், நேற்று காலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டமாக, விளை நிலங்களில் புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஒன்று கூடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இரவில் தான் தொந்தரவு என்றால், பகலில் வந்தால் என்ன செய்வது என, விவசாயிகள் புலம்புகின்றனர்.
நம்பியூரில் இன்று மக்களுடன்
முதல்வர் திட்ட முகாம்
கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நம்பியூர் பேரூராட்சியில், 15 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், இன்று நம்பியூரில் அடுத்த கொன்னமடையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது.
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கும்படி, பேரூராட்சி நிர்வாகத்தினர் கேட்டுக்
கொண்டுள்ளனர்.
மளிகை கடைக்காரர் கைதுபுகையிலை பொருட்களை, விற்பனைக்கு வைத்திருந்ததாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.கோபி போலீசார் சீதாலட்சுமிபுரத்தில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோகிலா, 36, என்பவர் தனது மளிகை கடையில், 20 பாக்கெட் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.
கணவர் மாயம்போலீசில் மனைவி புகார்
திங்களூர் அருகே செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன், 70. கூலித்தொழிலாளி; இவர் கடந்த டிச., 15ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பாவாயம்மாள், 65, கொடுத்த புகார்படி, திங்களூர் போலீசார் தேடி
வருகின்றனர்.
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு சத்தியமங்கலம் சப்-டிவிசன் கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றிய அய்மன் ஜமால், எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக பணியிடம் மாற்றம்
செய்யப்பட்டார். இதையடுத்து, திருநெல்வேலி நகர குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையராக பணியாற்றிய சரவணன், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.,யாக நியமித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, நேற்று
சத்தியமங்கலம் சப்-டிவிசன் டி.எஸ்.பி.,யாக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவில் நிலம் அளவீடு
செய்யும் பணி தீவிரம்
அம்மாபேட்டை அருகேயுள்ள, நெரிஞ்சிப்பேட்டையில் ஆயிர வைசியர் மடத்திற்கு சொந்தமான காசி விசுவநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில் மடத்துக்கு சொந்தமாக, 602 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்களை அளவீடு செய்து, எல்லை கற்கள் நடும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணிகளை, ஈரோடு ஹிந்து சமய அறநிலைத்துறை தாசில்தார் சங்கர் கணேஷ், ஓய்வு பெற்ற தாசில்தார்
பழனிசாமி, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., அழகுராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். மடத்துக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும், முழுமையாக அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். அந்தியூர் சரக ஆய்வாளர் மாணிக்கம், நில அளவையாளர்கள், மடத்தின் அறங்காவலர் குழுவினர், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
முத்துாரில் டூவீலர் திருட்டு
திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே, கஸ்பா பழையகோட்டையை சேர்ந்த சேகர், 45, முத்துார் பஸ் நிலையம் எதிரில் அம்மன் சைக்கிள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான ஹீரோ ஹோண்டா பைக்கை, அவர் கடை முன் நிறுத்தி வைத்திருந்தார்.
மாலை, 5:15 மணிக்கு அருகில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். 20 நிமிடம் கழித்து வந்தபோது பைக்கை காணவில்லை இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேங்காய் பருப்பு விற்பனைதிருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், தாராபுரம், திருப்பத்துார், பழநி, லாலாபேட்டை, திருச்சி, கரூர், காங்கயம் பகுதி விவசாயிகள், 54 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 85.09 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 57.68 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 38 லட்சத்து, 28 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
ரூ.1.77 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 63 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 80.39 ரூபாய், அதிகபட்சமாக, 82.69 ரூபாய், சராசரியாக, 82.26 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 21.75 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 533 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.
பெருந்துறையில் ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் அறை திறப்பு
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்-2021ன் போது, பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமாருக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கொ.ம.தே.க., வேட்பாளர் கே.கே.சி.பாலு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அனைத்து கட்சியினர் முன், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறை நேற்று திறக்கப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணி தொடங்கியது.
அந்தியூர் எம்.எல்.ஏ.,ஆய்வுஅந்தியூர் யூனியன், சின்னத்தம்பி பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, கரட்டுப்பாளையம் காலனி பகுதியில் வசித்து வரும் மக்கள், மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த மயான இடத்தை, வருவாய் துறை பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். பட்டாளம்மன் கோவில் கட்டட நிலம் அளவீடு செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தனர்.இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட மயான இடத்திற்கும், பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, அடுத்த கட்ட
நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கலந்தாலோசித்தனர்.
தீப்பிடித்து எரிந்த மொபட்ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் தமிழரசன், 23, பெயின்டர். நேற்று இரவு, 8:50 மணியளவில் டிபன் வாங்க தன் வீட்டில் இருந்து, ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் நாடார்மேடு நோக்கி வர சாஸ்திரி நகர் பிரிவை கடக்க முற்பட்டார். அப்போது மொபட்டின் பின்புறம் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதும் தமிழரசன் கீழே குதித்து உயிர் தப்பினார். அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி உடனடியாக தீயை அணைத்தனர். மொபட்டின் பின்புறம் லேசாக கருகியது. பெட்ரோல் கசிவு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவந்தது.
மக்கள் நல பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் நல பணியாளர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் தெய்வசிகாமணி, சரவணன், சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமையில், நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கால முறை ஊதியம் பணி நிரந்தரத்தோடு வழங்க வேண்டும். இறந்த பணியாளர் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஆணை வழங்க வேண்டும். 33 ஆண்டாக இதே பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி பணியாளருக்கும், மருத்துவ காப்பீடு, சேமநல நிதி ஏற்படுத்திட வேண்டும்,
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஒர்க் ஷாப் உரிமையாளரை வெட்டியவருக்கு சிறை
பெருந்துறை தாலுகா, நல்லாம்பட்டி ஜெ.ஜெ. நகரில் பைக் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் கோவிந்தராஜ். 2021 ஏப்.,8ல் இரவு, 9:30 மணிக்கு தன் பட்டறையில் ரேடியோவில் பாட்டு கேட்டு கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
ரேடியோ சத்தம் அதிகமாக இருப்பதாக கூறி பட்டறைக்கு எதிரில் குடியிருந்த கண்ணுபையன் மகன் குமார், ஆத்திரமடைந்து கோவிந்தராஜை தகாத வார்த்தையால் பேசி அரிவாளால் தலையிலும், கையிலும் வெட்டினார்.காயமடைந்த
கோவிந்தராஜ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கிருஷ்ணபிரியா விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குமாருக்கு ஒரு பிரிவில் ஓராண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம், மற்றொரு பிரிவில் மூன்று மாத சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் திருமலை ஆஜரானார்.
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காங்கேயம், வெள்ளகோவிலில்
கடந்தாண்டு 1,178 வழக்கு பதிவு
காங்கேயம் பகுதியில் அரிசி மில்கள், தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யும் களம், தேங்காய் எண்ணெய் மில், பனியன் கம்பெனிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும் பிரசத்தி பெற்ற சிவன்மலை முருகன் கோவில் உள்ளது. காங்கேயம் பகுதியில் கடந்த, 2023ம் ஆண்டு தற்கொலை வழக்கு, 70, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், 2, வாகன விபத்து, 62, காணாமல் போனவர்கள், 42, கொள்ளை வழக்கு, 3, கொலை வழக்கு, 3, விபத்து, 152, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்றமைக்காக, 130, திருட்டு வழக்கு, 4, வன்கொடுமை சட்ட வழக்கு, 2, என பல்வேறு சட்டப்பிரிவுகளில் கடந்த ஆண்டு, 671 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* வெள்ளகோவில் பகுதியில் தற்கொலை வழக்கு, 60, சட்டத்திற்கு புறம்பாக சாராயம் விற்ற வழக்கு, 66, காசு வைத்து சூதாடிய வழக்கு, 24, லாட்டரி சீட்டு விற்பனை செய்தது, 22, திருட்டு வழக்கு, 17, அடிதடி, 17, காணாமல் போனது, 7, உட்பட மொத்தம், 507 வழக்குகள் கடந்தாண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மயங்கி விழுந்தவர் சாவுசித்தோடு அருகே, நசியனுார் எளையம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 43. நசியனுார் ராயபாளையத்திலுள்ள நார் மில்லில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல், வேலைக்கு சென்ற சந்திரசேகரன், மதிய உணவு சாப்பிட்டு, கை கழுவ சென்றபோது மயங்கி விழுந்தார். இவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
முத்துக்கவுண்டன்பாளையம்ஊராட்சிக்கு அபராதம் விதிப்பு
திருச்சியில் இருந்து, ஈரோடு வழியாக பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக, ரயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால், டிரைவர் ஏதோ அசாம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரயிலை அதே இடத்தில் நிறுத்தினார்.எந்தவித சிக்னலும் இல்லாததால் ரயில் புறப்படுவதற்கு தாமதமானது. ஈரோடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அதில், முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம், ரயில் பாதை அருகே குப்பையை அப்புறப்படுத்தும் போது, ரயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.
எவ்வித பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்த பின், ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்துக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.