ADDED : ஜன 03, 2024 11:43 AM
வளரிளம் தொழிலாளி மீட்பு
தொழிலாளர் நலத்துறை சார்பில், ஈரோடு, கோபி, பெருந்துறை, சத்தி, பவானி போன்ற இடங்களில், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள் தடுப்பு சட்டப்படி, 82 கடைகள், நிறுவனங்களில் சோதனை நடந்தது.
இதில் கோபியில் ஒரு கார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்த, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன், வளரிளம் பருவ தொழிலாளராக பணி செய்வது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார். நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகேசன் தெரிவித்தார்.
மாகாளியம்மன் கோவிலில்
இன்று பொங்கல் வைபவம்
சென்னிமலையை அடுத்த தொட்டம்பட்டி, மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா இன்று இரவு நடக்கிறது.
இதையொட்டி இன்று காலை, 6:௦௦ மணிக்கு சென்னிமலை பிராட்டியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக மேளதாளம் முழங்க, பசுமாடு, குதிரை முன் செல்ல ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
நாளை அதிகாலை, 6:00 மணிக்கு குதிரை துலக்குதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு அழைத்தல் நடக்கிறது, காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மதியம் கும்பம் நீர்துறை சேருதல், மாலையில் மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. அன்றிரவு மறு பூஜை அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
சிறுத்தை கடித்ததில்கன்று குட்டி பலி
தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகம் பனகள்ளியை சேர்ந்தவர் சனாவுல்லா, 45; இவரது விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை, வனப்
பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, நேற்று முன்தினம் இரவு கடித்துக் கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
வீட்டில் திருட்டு முயற்சி
ஏமாந்த ஆசாமி 'உஷார்'
ஈரோடு, கொல்லம்பாளையம், காந்திஜி வீதியில் வசிப்பவர் சிவக்குமார். ஐ.டி., நிறுவன ஊழியர். கடந்த, 31ம் தேதி காங்கேயம் சென்றவர், நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டு முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அனைத்து அறைகளிலும் பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தது.
பீரோக்கள் திறந்து பொருட்கள் கலைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். வீட்டில் திருட புகுந்த ஆசாமி, பீரோக்களை திறந்து பார்த்து தேடியுள்ளார். எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளார். அதேசமயம் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கை கழற்றி எடுத்து சென்று விட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயான ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முறையீடு
கோபி--சத்தி சாலையில், கரட்டடிபாளையத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் (முஸ்லீம்), அங்குள்ள இடத்தை மாயானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மெயின்ரோட்டில் விரிவாக்கப்பணி நடக்கிறது. இந்நிலையில் கரட்டடிபாளையம், லக்கம்பட்டி, கலிங்கியம் பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை ஊர்வலமாக வந்து, கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினியிடம் நேற்று மனு கொடுத்தனர்.
தற்போது மயானம் உள்ள இடத்தில் விபத்து, உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே மயானத்தை முழுவதுமாக அகற்றி, கான்கிரீட் வடிகால் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பெற்ற திவ்ய பிரியதர்ஷினி, அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் எனக்கூறி அனுப்பி வைத்தார்.
வணிகர் சங்க இளைஞரணிநிர்வாகிகள் கொண்டாட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், இளைஞரணி கொண்டாட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் வரவற்றார். 'சிரிப்பும் சிந்தனையும்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. பேரவை மாவட்ட தலைவர் சண்முகவேலின், 'காகித பொட்டலத்தில் நெருப்பை மறைத்து வைக்க முடியாது' என்ற சிறுநுால் வெளியிடப்பட்டது. ஆசிய அளவில் சிலம்ப போட்டியில் தங்க பதக்கம் வென்ற சதீஸ்வர் கவுரவிக்கப்பட்டார்.
தடுப்பணையில் மூழ்கிகாங்கேயம் வாலிபர் சாவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், அவிநாசிபாளையம் புதுார் அருகே, தேவனாம்பாளையத்தை சேர்ந்த ராஜன் மகன் இளவரசன், 26, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவன டெலிவரி ஊழியர். ஆறு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள், 15க்கும் மேற்பட்டோருடன், ஈரோடு மாவட்டம் காரணம்பாளையம் தடுப்பணைக்கு சென்றார்.
அங்கு குளித்தபோது இளவரசன், நிஷாந்த் ஆகியோர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கினர். இதைப்பார்த்த மற்ற நண்பர்கள் இருவர் நீந்தி சென்று மீட்க முயன்றனர். இதில் நிஷாந்த்தை மட்டும் காப்பாற்ற முடிந்தது. இளவரசன் மூழ்கி பலியாகி விட்டார்.
கல்வி உதவித்தொகை பெற
மாணவியருக்கு அழைப்பு
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், அரசு பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தேசித்துள்ளது. ஆண்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும். தேசிய வங்கி அல்லது அஞ்சல் வங்கிகளில் கணக்கு துவங்கி, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இத்துடன் வருமான சான்று மற்றும் ஜாதிச்சான்று நகலுடன், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் விபரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரத்தை, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டடம், 4ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நெசவு தொழிலாளி சாவுசென்னிமலையை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் விஜயன், 63, கைத்தறி நெசவு தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, அம்மாபாளையம் அருகே நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
படுகாயம் அடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். அவரின் மகன் வெள்ளியங்கிரி புகாரின்படி, சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
டி.ஜி.புதுாரில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என்.பாளையம் யூனியன் பெரிய கொடிவேரி பேரூராட்சியில், 15 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், டி.ஜி.புதுாரில் நேற்று நடந்தது.
கோபி தாசில்தார் உத்திரசாமி முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் தமிழ் மகன் சிவா, செயல் அலுவலர் ராஜ விஜய கணேஷ் தொடங்கி வைத்து, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தண்டவாளத்தில்
வாலிபர் உடல் மீட்பு
நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், சேலம் மாவட்டம் சங்ககிரி இடையே, ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த பூபாலன் மகன் உத்திரன், 21, பி.சி.ஏ., பட்டதாரி என தெரிந்தது. கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்காக சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.
அரசுப்பள்ளிகளில் 3ம் பருவ
பாடப்புத்தகம் வினியோகம்
ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளில் கடந்த 23 முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு இருந்தது. 1ல் தேர்வு விடுமுறை நிறைவு பெற்றது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளிகள் திறந்தன.
மாவட்ட அளவில், 6, 7 மற்றும் ஈரோடு கல்வி மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான, 56,903 மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டு வழங்கப்பட்டது. 8, 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். இந்த வகுப்புகளுக்கு முதல் பருவத்திலேயே ஆண்டுக்குரிய பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டு விட்டன.
அதேசமயம் மாவட்டத்தில் உள்ள, 1,079 அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 42 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டது.
மாநில கையுந்து போட்டியில்
குமுதா பள்ளி இரண்டாமிடம்
பள்ளி அளவிலான மாநில கையுந்து பந்து போட்டி, திருச்சி -அருகே தொட்டியம்- கொங்கு நாடு பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவியர், அரை இறுதிப்போட்டியில் திருப்பத்துார் மாவட்ட அணியை, 25--13, 25--16 என்ற கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்றனர்.
சாதனை படைத்த மாணவிகளை, ஈரோடு எஸ்.பி., ஜவகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் பாராட்டினர். குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், துணை செயலர் டாக்டர் மாலினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.