/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/33 ஆண்டாக முடங்கியுள்ள நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டம்33 ஆண்டாக முடங்கியுள்ள நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டம்
33 ஆண்டாக முடங்கியுள்ள நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டம்
33 ஆண்டாக முடங்கியுள்ள நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டம்
33 ஆண்டாக முடங்கியுள்ள நஞ்சை ஊத்துக்குளி பாசன திட்டம்
ADDED : ஜன 01, 2024 11:24 AM
ஈரோடு: முடங்கி கிடக்கும் பெரும்பள்ளம் - நஞ்சை ஊத்துக்குளி பாசனத் திட்டத்தை சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்பவானி பாசனத்தின் பிரதான கால்வாயில் இருந்து வரும் கசிவு நீரை சேகரித்து, பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், ஈரோடு பெரும்பள்ளம் என்ற இடத்தில், 1964ல் தடுப்பணை அமைக்கப்பட்டது. இது சூரம்பட்டி அணைக்கட்டு என அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பெரும்பள்ளம்- நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசன திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காசிபாளையம், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, கொமாரமங்கலம், கருக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. 1990- வரை விவசாய நிலங்களை வளம் கொழிக்கச் செய்த இந்த பாசன வாய்க்கால், 33 ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது.
அணைக்கட்டு மற்றும் பிரதான வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததாலும், வாய்க்கால்களை துார்வாரி பராமரிக்காததாலும், பாசன திட்டத்தால் பலன் பெற்ற விவசாய நிலங்கள், தரிசு நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி விட்டன. தற்போது அணைக்கட்டு நிரம்பி வழியும் நிலையில், பாசன வாய்க்காலில் சிறிய அளவில் கூட தண்ணீர் வரவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வாய்க்காலின் ஆழம், அணையின் உயரம் இவற்றுக்கு இடையே சரியாக விகித முறையில் இந்த அணை கட்டப்படவில்லை. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் அளவுக்கு அழுத்தம் இல்லாததால் ஒரு துளி தண்ணீர் கூட வாய்க்காலில் செல்லாமல், ஓடை வழியே வெளியேறுகிறது. எனவே அணைக்கட்டில் உள்ள தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும். இதற்காக அணைக்கட்டு தடுப்புச்சுவரின் உயரத்தை மேலும் சில அடி உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி அணைக்கட்டு முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை, ஓடையில் செடி, கொடி வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கால்வாய்களில் கழிவு கொட்டியுள்ளனர். இவற்றை அகற்ற வேண்டும்.
அணைக்கட்டை சுற்றியுள்ள சுவர்களை கான்கிரீட் சுவர்களாக மாற்றி உயரத்தை அதிகப்படுத்தினால்தான், வாய்க்காலில் தண்ணீர் எளிதாக செல்லும். இப்போது வாய்க்காலில், 10 லட்சம் செலவில், 2 கி.மீ., துாரத்துக்கு துார் வாரியுள்ளனர். இதனால் எந்த பயனுமில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சூரம்பட்டி அணைக்கட்டு பாசனத்தை மீண்டும் உயிர் பெற வைக்க வேண்டுமானால், அணைக்கட்டு பாசனத்தை முழுமையாக துார்வார வேண்டும். குறிப்பாக நஞ்சை ஊத்துக்குளி ஓடையை கடைக்கோடி வரை துார்வார வேண்டும். இவ்வாறு கூறினர்.