Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பால் ஊக்கத்தொகை ஏப்., வரை வழங்கல்; வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்

பால் ஊக்கத்தொகை ஏப்., வரை வழங்கல்; வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்

பால் ஊக்கத்தொகை ஏப்., வரை வழங்கல்; வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்

பால் ஊக்கத்தொகை ஏப்., வரை வழங்கல்; வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்

ADDED : மே 31, 2025 06:25 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:பழங்குடியினர் நல அமைப்பு குணசேகரன்: சென்னை பல்கலை காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையில், 'ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உன்னிச்செடி, சீமைக்கருவேல், சீமை தகரை அதிகம் வளர்ந்து காட்டின் வளத்தை அழிப்பதாக கூறியுள்ளனர். நுாறு நாள் வேலை திட்டத்தில், வனத்துக்குள் வளர்ந்துள்ள தேவையற்ற தாவரங்களை அகற்ற வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முனுசாமி: பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில், 2004-05 உள்ளிட்ட சில ஆண்டுக்கு, ஆலையின் லாபத்தில் பங்குத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மின்வாரியம் மூலம் ராசிபுரம் - பாலவாடி, திங்களூர் - திருவாச்சி மின் பாதை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடன் வழங்க வேண்டும். பாலுக்கான ஊக்கத்தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

பண்ணாரி சர்க்கரை ஆலை அதிகாரி: கடந்த, 2004-05, 2008-09ம் ஆண்டு லாபத்தில், 1,014 விவசாயிகளுக்கு, 1.35 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதில், 479 விவசாயிகளுக்கு, 79 லட்சம் ரூபாய் வழங்கிவிட்டோம். மற்றவர்களுக்கு முகவரி, பிற ஆவணங்கள் குறைபாடு உள்ளதால் விரைவில் வழங்குவோம்.ஆவின் அதிகாரி: கடந்த டிச., வரை ஆவின் பாலுக்கான ஊக்கத்தொகை சொசைட்டி மூலம் வழங்கினோம். ஜன., முதல் ஆவின் நிர்வாகம் நேரடியாக வழங்குகிறது. கடந்த ஏப்., வரை வழங்கிவிட்டோம். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் குரு சரஸ்வதி: தென்னையை தாக்கும் வெள்ளை சுருள் ஈயை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி உற்பத்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.காளிங்கராயன் பாசன சபை வேலாயுதம்: கணபதிபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பில்லை. திறந்த வெளியில் நெல், மூட்டைகள் உள்ளது. கரும்பு வளர்ப்போர் சங்கம் குப்புசாமி: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லை. இதனால் மழையில் நனைந்து முளைத்துள்ளன. பெத்தாம்பாளையத்தில் சன்ன ரகத்தை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்: தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 37 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு, 27,818 டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். சன்ன ரக நெல்லை அரவை செய்தால், 58 சதவீதம்தான் அரிசி கிடைக்கிறது. 68 சதவீதம் கிடைக்க அறவை மில்காரர்கள் சொல்வதால் அவற்றை வாங்க மறுக்கின்றனர். எனவே, சன்ன ரகத்தை குறைவாக வாங்குகிறோம். அதை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் விற்கலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us