Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் எச்சரிக்கை

அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் எச்சரிக்கை

அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் எச்சரிக்கை

அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: கீழ்பவானி பாசன விவசாயிகள் எச்சரிக்கை

ADDED : ஜன 04, 2024 10:57 AM


Google News
ஈரோடு: கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க செயலர் பொன்னையன் தலைமையில் விவசாயிகள், கீழ்பவானி வாய்க்கால் (எல்.பி.பி.,) நவீனமயமாக்கும் பணியை மேற்கொள்வது குறித்து, நேற்று ஈரோட்டில் உள்ள நீர்வளத்துறை அலுவலர் திருமுருகனிடம் மனு அளித்தனர்.

அதன் பின், பொன்னையன் கூறியதாவது:

மோகனகிருஷ்ணன் நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில்தான், எல்.பி.பி., வாய்க்கால் நவீனமயமாக்கல் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏற்றுக்கொண்டார். அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி இத்திட்டத்தை தொடங்க நிதி கிடைத்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், எல்.பி.பி., வாய்க்கால் நவீனமயமாக்கல் திட்டத்தை தடுக்க, விவசாயிகள் சிலர் ரவி என்பவர் தலைமையில் சில போராட்டங்களை நடத்தினர்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கடந்தாண்டு திட்ட விவரங்களை அளித்தார். ஆனால் எல்.பி.பி., நவீனமயமாக்கல் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளின் மனுவை, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் கடந்த டிச.,25ல், எல்.பி.பி., நவீனமயமாக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கூட்டத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி நடத்தி, அவர்களின் ஆலோசனைகளை கேட்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் அழைக்கப்படவில்லை. ஆயக்கட்டு பாசனத்தில் இல்லாத திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் அழைக்கப்பட்டார். இந்த கூட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்பை முடக்கும் வகையில், நடத்திய கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தவறினால் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட அனைவர் மீதும், நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்யப்படும் என, வக்கீல் மூலம் அறிவிக்கை செய்துள்ளோம்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு வேலைகளை, உயர்நீதிமன்ற தீர்ப்புபடி செயல்படுத்த முதல்வர் தலைமையில், சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். நீர்வள துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட துறையின் நடவடிக்கையில், அமைச்சர் முத்துசாமி தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவது, நீதிமன்ற

அவமதிப்புக்கு உட்பட்ட குற்ற நடவடிக்கையாகும்.

நீர்வளத்துறை செயற்பொறியாளர், ஏற்கனவே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு, நவீனமயமாக்கல் குறித்த வேலை திட்ட அறிக்கையை வழங்கி உள்ளார். ஆனால், அமைச்சர் மீண்டும் ஒரு தரப்பினரை அறிக்கை தயார் செய்யும்படி கூட்டம் கூடி முடிவு செய்தது சட்டப்படி குற்றம். அமைச்சர் முத்துசாமி செயல்பாடுகளை உடனடியாக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us