ADDED : ஜூன் 16, 2024 01:04 PM
- நிருபர் குழு -
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் ஒரு வருட பிரசவ கால விடுப்பு வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியரின் ஆண் வாரிசுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பவானிசாகர் வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பவானிசாகர் யூனியன் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சரிதா தலைமையில் செயலாளர் காந்திமதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை யூனியன் அலுவலகம் முன், அம்மாபேட்டை வட்டார தலைவர் ராதா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த, குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் விஜயா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சுசீலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.