/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை நில பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; தாசில்தார் உறுதி சென்னிமலை நில பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; தாசில்தார் உறுதி
சென்னிமலை நில பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; தாசில்தார் உறுதி
சென்னிமலை நில பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; தாசில்தார் உறுதி
சென்னிமலை நில பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்; தாசில்தார் உறுதி
ADDED : ஜூன் 05, 2025 01:29 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம், காந்தி நகர் பகுதியில், 1979ம் ஆண்டு முதல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைலாசம் என்பவரிடத்தில், 225 வீட்டுமனைகளை வாங்கியுள்ளனர். இதில், 175 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால், வீட்டுமனைகளை விற்பனை செய்த கைலாசம், மூல பத்திரத்தை வைத்து அதே வீட்டுமனைகளை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில், தான பத்திரம் எழுதி கொடுத்து விற்பனை செய்ததை மறைத்து, ஆவணங்களை தயார் செய்து அந்த இடத்தை வைத்து வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில், கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
மேலும், அவர் வங்கிகளுக்கு கடனை செலுத்தவில்லை. அதனால், விற்பனை செய்த இடத்திற்கும், வங்கி நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளது. இடத்தை வாங்கிய, 175 பேர் அந்த இடத்தை விற்க முடியாத நிலையில் உள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நுாற்றுக்கணக்கானோர், கடந்தாண்டு ஈரோடு கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் பெருந்துறை தாசில்தார் ஆகியோரிடம் புகார் செய்தனர்.
ஓராண்டு கடந்த பிறகும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வருவதாக தகவல் வெளியானது. உடனடியாக அப்பகுதி மக்கள் திரண்டு, பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதையடுத்து பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சென்னிமலை வருவாய் ஆய்வாலர் சிலம்பரசன் ஆகியோர் சென்னிமலை வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு, பொதுமக்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பிரச்னைக்கு காரணமான, போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது நிலங்களுக்கு பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் உள்ள, நில மோசடி தொடர்பான ஆவணங்களை பெற்று, தீவிர விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ஜெகநாதன் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.