ADDED : ஜன 07, 2024 10:56 AM
புதிய ஆர்டர் விசாரணை துவங்க இருப்பதால், பாலியஸ்டர் துணி மற்றும் ஆடைஇறக்குமதிக்கு, கடுமையான கட்டுப்பாடு விதிக்க, உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போர், வளர்ந்த நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத அளவுக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
பஞ்சு, நுால்விலை பல மாதங்களாக சீராக இருப்பதால், உள்நாட்டு பனியன் உற்பத்தி மற்றும் வர்த்தகம் சீரான நிலையில் உள்ளது. பலகட்ட சோதனைக்கு பின், தீபாவளி பனியன் வர்த்தகத்தில் முன்னேற்றம் இருந்தது; அடுத்ததாக, ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வியாபாரம் மந்தமாக சென்று _கொண்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு பின், இரண்டு மாதங்கள், பனியன் விற்பனையில் ஓய்வு காலம் என்றே கூறலாம். அதற்கு பிறகு, பிப்., மாதத்தில் இருந்தே புதிய ஆர்டர் விசாரணை வரத்துவங்கும். உள்நாட்டு பனியன் உற்பத்தியை பொறுத்தவரை, மின் கட்டண உயர்வும், வங்கதேச ஆடை இறக்குமதியும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
எனவே, வங்கதேசம், தைவானில் இருந்து, ஆயத்த ஆடை, பாலியஸ்டர் துணி இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். பனியன் தொழிலை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டப்) தலைவர் மணி _கூறியதாவது:
தீபாவளி பண்டிகை வரை பரபரப்பாக இருக்கும் பனியன் வர்த்தகம், அடுத்த இரண்டு மாதத்தில் மந்தமாகும். ஜன., கடைசி அல்லது பிப்., மாதத்தில் இருந்து வர்த்தக விசாரணையும், உற்பத்தியும் வேகமெடுக்கும். தற்போது, முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் வரத்து துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து, உள்நாட்டு பனியன் உற்பத்தி தொடர்பான விசாரணை துவங்கும். இனியாவது, மாநில அரசு, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வங்கதேசம், தைவான் நாடுகளில் இருந்து, பாலியஸ்டர் ஆடைகள், துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இது, உள்நாட்டு பனியன் வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கிறது. எனவே, பாலியஸ்டர் துணி மற்றும் ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.