/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்: அடிப்படை வசதியின்றி புலம்பெயரும் அபாயம்50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்: அடிப்படை வசதியின்றி புலம்பெயரும் அபாயம்
50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்: அடிப்படை வசதியின்றி புலம்பெயரும் அபாயம்
50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்: அடிப்படை வசதியின்றி புலம்பெயரும் அபாயம்
50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமம்: அடிப்படை வசதியின்றி புலம்பெயரும் அபாயம்
ADDED : ஜன 28, 2024 11:05 AM
ஈரோடு: மின் இணைப்பின்றி கடந்த, 50 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கும் கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால், அங்கிருந்து முழுமையாக மக்கள் புலம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதி, கடம்பூர் மலையின் அடர் வனத்தில் மல்லியம்மன் துர்கம் கிராமம் அமைந்துள்ளது. கடம்பூரில் இருந்து, 10 கி.மீ.,ல் உள்ள இங்கு செல்வதற்கு சாலைவசதி இல்லை. கரடு, முரடான, செங்குத்து மற்றும் சரிவான பாதை உள்ளது.
போராடியபடியே டூவீலரில் செல்லலாம். அல்லது சரக்கு வாகனம் மூலம், 20, 30 பேர் சேர்ந்து ஒருமுறை பயணத்துக்கு, 3,000 ரூபாய் கட்டணம் பேசி பகிர்ந்து வழங்குகின்றனர். கடந்த, 2011ல் மல்லியம்மன் துர்கம் கிராமத்தில், 159 குடும்பத்தில், 650 பேர் வசித்தனர். தற்போது, 80 குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர்.
கடந்த, 1972ல் கடம்பூரில் இருந்து மரக்கம்பம் அமைத்து, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கினர். 1974ல் ஏற்பட்ட காட்டு தீயில், மின் மரக்கம்பங்கள் எரிந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2018ல் மின்வாரியம், 123 தானியங்கி சோலார் ஒளி அமைப்பை வீடுகளுக்கு வழங்கியது. அதில், பெரும்பாலான பேட்டரிகள், மின் விளக்குகள் செயலிழந்துவிட்டன. நிரந்தரமாக மண்ணெண்ணெய் விளக்குகளே ஒளிர்கின்றன.
இக்கிராமத்தில் வசிக்கும் மாதேஸ்வரன், தமிழக பழங்குடி மக்கள் சங்க மாநில பொருளாளர் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:
அடர்ந்த வனப்பகுதி என்பதால் இரவு, 7:00 மணிக்கே நள்ளிரவாகி விடும். சமைக்கும் நெருப்பின் ஒளியும், மண்ணெண்ணெய் விளக்கு ஒளி மட்டுமே வெளிச்சமாகும். இரவில், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிரை நாசமாக்குகின்றன. கடந்த, 50 ஆண்டுக்கு மேலாக நல்ல வீடு, மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மின்சாரம், சாலை வசதி, பாதுகாப்பான குடியிருப்பு வழங்காவிட்டால், முழுமையாக புலம் பெயர்வதை தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறையினர் கூறுகையில், 'வன உரிமை சட்டப்படி, சமீபத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மின் இணைப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். கலெக்டர் மூலம் வனத்துறை அனுமதி பெற்று, மின்வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.