Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/௪வது குடிநீர் திட்டத்தால் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை

௪வது குடிநீர் திட்டத்தால் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை

௪வது குடிநீர் திட்டத்தால் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை

௪வது குடிநீர் திட்டத்தால் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை

ADDED : பிப் 06, 2024 10:51 AM


Google News
திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் மூலம், மாநகரின் சில பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் சாத்தியமாக உள்ளது.

திருப்பூருக்கு 1965ம் ஆண்டில் முதலாவது குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இத்திட்டம் நகராட்சி மூலம் நேரடியாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின் 1993ல், தினமும் 3 கோடி லிட்டர் அளவு குடிநீர் கொண்டு வரும் விதமாக இரண்டாவது குடிநீர் திட்டம், குடிநீர் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் தேவை அதிகரித்த நிலையில் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் வாயிலாக 3வது குடிநீர் திட்டம் கடந்த 2005ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி பகுதிக்கு தினமும் 9 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது.

நகரின் வளர்ச்சி, மாநகராட்சி விரிவாக்கம் போன்றவற்றால் அதிகரித்த குடிநீர் தேவையைக் கருதி, 4வது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 'அம்ரூத்' திட்டத்தில் 1,064 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் துவங்கப்பட்டது. இதன் மூலம் தினமும் 23 கோடி லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிட்டு பணிகள் துவங்கின.

இத்திட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தடுப்பணை 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. அதனருகே குடிநீர் உறிஞ்சும் மையம் கட்டப்பட்டது. குருக்கிலிபாளையம் பகுதியில் தன்னார்வலர்கள் பெற்றுத்தந்த நிலத்தில் சுத்திரகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் உறிஞ்சும் இடத்தில் இருந்து, 20 கி.மீ., நீளத்துக்கு ராட்சத குழாய் பதித்தும், நீரேற்று மையங்கள் அமைத்தும் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்து சேர்த்து, அங்கிருந்து தினமும் 20 முதல் 27 கோடி லிட்டர் அளவு குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்ட மையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

இம்மையத்திலிருந்து 150 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சியில் பகுதி வாரியாக 29 மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் தரை மட்டத் தொட்டிகளில் நீர் கொண்டு வரப்படுகிறது.

இவற்றிலிருந்து 1,063 கி.மீ., நீளத்துக்கு வினியோக குழாய்கள் மாநகராட்சி பகுதி முழுவதும் பதிக்கப்பட்டு அதன் மூலம் 1.18 லட்சம் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் சில பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அனைத்து மேல்நிலைத் தொட்டிகளிலும் நீர் நிரப்பி சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us