ADDED : ஜூன் 15, 2024 09:19 AM
ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் பகுதியில் ஓடையோர புதரில், நேற்று வித்தியாசமான சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, மிகப்பெரிய பாம்பு அங்குமிங்கும் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். நிலைய அதிகாரி முத்துசாமி, பழனிவேல் ராஜன் உட்பட தீயணைப்பு வீரர்கள் எட்டு பேர் விரைந்தனர்.
ஒரு புதர் மறைவில் பொந்துக்குள் தலையை நுழைத்திருந்த, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். 10 அடி நீளத்தில் இருந்த பாம்பை பார்த்து, வேடிக்கை பார்த்த பலர் பீதியடைந்தனர். இதேபோல் கொல்லம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி அருகே, ஒரு சாரைப்பாம்பு நடமாடுவதாக தகவல் வரவே, தீயணைப்பு வீரர்கள் அங்கும் சென்று பாம்பை பிடித்தனர்.
இவ்விரு பாம்பையும், ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாநகரில் மலைப்பாம்பு பிடிபட்ட விஷயம், தீயணைப்பு நிலைய வீரர்களை மட்டுமின்றி, மக்களையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.