/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான ரோடால் நல்லமநாயக்கன்பட்டியில் தவிப்பு சேதமான ரோடால் நல்லமநாயக்கன்பட்டியில் தவிப்பு
சேதமான ரோடால் நல்லமநாயக்கன்பட்டியில் தவிப்பு
சேதமான ரோடால் நல்லமநாயக்கன்பட்டியில் தவிப்பு
சேதமான ரோடால் நல்லமநாயக்கன்பட்டியில் தவிப்பு
ADDED : செப் 07, 2025 03:16 AM

எரியோடு: நல்லமநாயக்கன்பட்டிக்கான ரோடு சேதமடைந்து பஸ் வசதி நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
எரியோடு அருகில் இ.சித்துார் ஊராட்சி கடைசி கிராமமாக உள்ளது நல்லமநாயக்கன்பட்டி. இக்கிராமத்தை வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டுடன் இணைக்கும் 2 கி.மீ., துாரம் ரோடு சேதமடைந்து கிடக்கிறது.
இந்த ரோட்டின் பெரும்பகுதி பேரூராட்சி பராமரிப்பிலும், எஞ்சிய குறைந்த துாரம் வேடசந்துார் ஒன்றிய பகுதிக்குள் இருப்பதால் முறையாக பராமரிப்பின்றி உள்ளது. இதோடு கிராமத்தில் பல தெருக்களில் கழிவு நீர் முறையாக வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கொரோனா தொற்று பிரச்னைக்கு முன்னர் இக்கிராமம் வழியே இயக்கப்பட்ட பஸ் சேவை தற்போது இல்லாததால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் இங்கு முறையாக செய்யப்படாததால் ரோடு ஓரங்களில் ஆங்காங்கே குப்பை தேங்கி துர்நாற்றம் உற்பத்தி மையங்களாக உள்ளன. இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெளியேறாத கழிவு நீர் எம்.ஜெயக்குமார், பா.ஜ., ஊடக பிரிவு மாவட்ட செயலாளர்: எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்லமநாயக்கன்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் இருந்து வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோடு சென்று பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த ரோட்டின் பெரும்பகுதி எரியோடு பேரூராட்சி பகுதிக்குள் இருப்பதால் ஒருமுறை ரோடு அமைப்பதுடன் பணி முடிந்து நிற்கிறது. அடுத்த முறை ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை சேதமடைந்த ரோட்டில் பராமரிப்பு பணி ஏதும் நடப்பதில்லை. தற்போது கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ரோடு தற்போது சேதமடைந்து கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். கிராமத்தில் பல இடங்களில் கழிவு நீர் முறையாக வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன் வாகனங்கள் செல்லும் போது சகதி தெறிக்கும் பிரச்னையும் ஏற்படுகிறது.
-பஸ் சேவை இன்றி அவதி எம்.கபிலன், பால் வியாபாரி: கொரோனா தொற்று பிரச்னைக்கு முன்னர் திண்டுக்கல்லில் இருந்து தொட்டணம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, எரியோடு வழியே குண்டாம்பட்டி வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வந்தனர். தற்போது இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமமாக உள்ளது. நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கப்பட்ட நுாலகம் செயல்படாமல் இருப்பதால் வேலைவாய்ப்பு, அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பாதிப்பாக உள்ளது. கிராமத்தில் இருந்து திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையை இணைக்கும் ரோடு இருந்தது. 1989ல் திண்டுக்கல் கரூர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இங்கு சப் வே அமைக்கப்படாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 'சப் வே' அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.