Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆக்கிரமிப்பில் நடைபாதைகள்; பாதயாத்திரை பக்தர்கள் அவதி

ஆக்கிரமிப்பில் நடைபாதைகள்; பாதயாத்திரை பக்தர்கள் அவதி

ஆக்கிரமிப்பில் நடைபாதைகள்; பாதயாத்திரை பக்தர்கள் அவதி

ஆக்கிரமிப்பில் நடைபாதைகள்; பாதயாத்திரை பக்தர்கள் அவதி

ADDED : ஜன 23, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
கன்னிவாடி: சேதமடைந்த நடைபாதை, ஜல்லி கற்கள் பரவிய வழித்தடம், ஆக்கிரமிப்பு கடைகள், சுகாதார வசதிகளற்ற சூழலால் பழநி பாதயாத்திரை பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பழநி கோயில் தைப்பூச விழா பாதையாத்திரை பயணம் ஆண்டுதோறும் மார்கழி முதல் வாரம் முதலே துவங்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்களும் மெட்டூர்-மூலச்சத்திரம் வழியே பாதயாத்திரை செல்வர்.

திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் 63 கிலோமீட்டர் துாரத்திற்கு ரோட்டின் ஓரமாக பேவர் பிளாக் கற்களால் தனியாக நடைபாதை அமைக்கப்பட்டது.

தைப்பூச விழா முடிந்த பின்பும் பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் பாதயாத்திரை பயணம் இருக்கும். இந்தாண்டு பக்தர்களின் வருகை 2 மாதங்களுக்கு முன் துவங்கியது. கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.

முன்னதாக பகலில் ஓய்வு, மாலை முதல் மறுநாள் காலை வரை பயணம் தொடர்கின்றனர்.

இருப்பினும் போதிய பராமரிப்பின்றி பெரும்பாலான இடங்களில் நடைபாதை சேதம் அடைந்தது. வழித்தட கிராமங்களில் தனியார் கடைகள், வீடுகளுக்கான முன் பகுதியை நீட்டித்து ஆக்கிரமித்துள்ளனர்.

பிற இடங்களில் முட்புதர்கள் மண்டி கிடந்தது. பல பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் மாயமாகி உள்ளது. இத்தடத்தை 4 வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி பல மாதங்களாகிறது.

அதிகாரிகள் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் நடந்த பணி தற்போது பெருமளவு முடிக்கப்பட்டு உள்ளது. விரிவாக்க பணியில் பாதயாத்திரை நடைபாதை முழுமையாக புதுப்பிக்கும் பணி நடக்கவில்லை.

செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி தடத்திலான தற்போதைய ரோட்டில் 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. அச்சாம்பட்டி முதல் மூலச்சத்திரம் வரையிலான விரிவாக்க பணியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை வசதி, ரோட்டின் மேற்குப் பகுதியில் நடக்கிறது.

இதற்கான பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி முழுமையின்றி பல இடங்களில் மண் குவித்துள்ளனர். பக்தர்கள் ரோட்டின் நடுப்பகுதி வரை நடந்து செல்கின்றனர். இந்த பிரச்னையால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலைதடுமாறி உயிர் பலி அரங்கேறி வருகிறது. மாவட்ட நிர்வாகம் இத்தடங்களில் பயணிப்போரை அவதிக்குள்ளாக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும்.

பக்தர்கள் அவதி


பரமசிவம், அ.தி.மு.க., பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர், கன்னிவாடி: அச்சாம்பட்டி, சோமலிங்கபுரம் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக்கப் பணி முழுமையின்றி ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் வாகனங்களை நிலை தடுமாறச் செய்து வருகின்றன.

பேவர் பிளாக் பணிகள் பல இடங்களில் மேடு பள்ளங்களுடன் நடந்துள்ளது. பாதயாத்திரை தங்குமிடங்களில் போதிய தண்ணீர், சுகாதார வசதிகள் இல்லை.

இவற்றை அதிகாரிகள் கண்காணிக்காத நிலையில் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

குறுகிய திருப்பங்களில் வாகனங்களை எதிர்வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்கான குவி கண்ணாடிகள் பெயரளவில் அமைத்தனர். இவற்றில் பல சேதமடைந்து பல வாரங்களாகியும் சீரமைக்கப்படவில்லை.

--விபத்து அபாயம்


தயாளன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர், ரெட்டியார்சத்திரம்: தைப்பூச விழா முடிந்த பின்பும் சில வாரங்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை தொடரும்.

போதிய போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் பக்தர்கள் ஓய்விடங்களில் அலைபேசி, பணம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறுகிய ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் நடுரோடு செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுகிறது.

செம்மடைப்பட்டி, முத்தனம்பட்டி, ரெட்டியார்சத்திரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கண்காணிப்பு தேவை


சந்துரு, விவசாய தொழிலாளர் சங்க ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர், கன்னிவாடி: பாதயாத்திரை வழித்தடத்தில் ஓட்டல், டீக்கடை, உணவு பலகாரம், பழங்கள், இளநீர் விற்பனை என வழி நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளன.

தார் ரோட்டின் விளிம்பு வரை கூடாரம், பக்தர்கள் அமர நாற்காலிகள் என ஆக்கிரமிக்கின்றனர். சீசன் நேரங்களில் நடுரோட்டில் நடப்பதால் விபத்துக்கள் தொடர்கிறது.

ரோடு,நடைபாதை இடையே குழியாக கிடக்கிறது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு பூ, காய் கனி சரக்கு வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us