Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்

அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்

அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்

அல்லல்... அச்சம்... அவதி இன்னலில் திண்டுக்கல் 45வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 15, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல், : சுகாதாரக்கேடால் அல்லல், கொசுக்கடியால் தொற்று அச்சம் ,சாக்கடை வசதி இல்லாததால் அவதி என பல் வேறு இன்னல்களுக்கு மத்தியில் திண்டுக்கல் மாநகராட்சி 45 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.

வேளாங்கண்ணி மாதா கோயில் தெருக்கள், விரிவாக்கப் பகுதி தெருக்கள், புஷ்பவனம் தெரு, சுபாஷ் சந்திர போஸ் தெரு, கிழக்கு சவேரியார்பாளையம், ஆஷாத் தெரு, மதர்ஷாதெரு, அலிபாத்திமா தெரு, ஜின்னா தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, கோழிப்பண்ணைத்தெரு, பிச்சையம்மன் கோயில் தெருக்கள், மருத்துவர் சங்க தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி ரோடு 1 முதல் 10 தெரு வரை ,வேம்பன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக ரோடு, சாக்கடை, குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனாமல் பேக்டரி ரோடு பகுதியில் சாக்கடை நீர் வெளியேறாது தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகிறது. சிறு மழை பெய்தால் கூட கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது.

சாக்கடை இல்லாமல் கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நோய் தொற்று பகுதியை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள் . ரோடுகள் முறையாக இல்லாததால் பலர் விபத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைத்தொட்டி இல்லாமல் மக்கள் திறந்தவெளியில் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குடிநீரும் சரிவர வருவதில்லை.

வசதிகளே இல்லை


ஆரோக்கிய மேரி, எனாமல் பேக்டரி ரோடு : குடியிருப்புகள் பள்ளத்தில் உள்ளதால் சிறிய மழை பெய்தாலே மழை நீருடன் சாக்கடை நீரும் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. முதியவர்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள அனைவரும் நோய் தொற்றினால் பாதிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

நடவடிக்கை இல்லை


இந்திராணி, வேம்பன் காலனி : குடிநீர் வசதி இல்லை. கழிவுநீரால் துார்நாற்றம், நோய்தொற்று அபாயம் உள்ளது. எத்தனை முறை மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை. சுகாதாரக்கேடு, நாய்கள் தொல்லை, கொசுக்கடி என இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் வாழகின்றனர். எந்தவித வசதிகளும் செய்து தரவில்லை என்பதால் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். ஓட்டு கேட்டு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க மாட்டோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதியில்லை என்கின்றனர்


அமலோற்பவமேரி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டு பிரச்னைகள் கவனத்திற்கு வந்துள்ளது. மாநகராட்சியிடம் கவுன்சிலர் என்ற முறையில் பலமுறை கூறிவிட்டேன். நிதியில்லை என்ற பதிலை மட்டும் கூறுகின்றனர். சில நேரங்களில் சொந்த செலவில் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி செய்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மக்களிடம் அதிருப்தியை நாங்கள் பெற வேண்டியிருக்கிறது. குடிநீர் கூட வருவதில்லை. அதிகாரிகள் வரிவசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை,என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us