Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்

வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்

வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்

வசதிகள் இல்லை; சின்னாளபட்டியில் தவிக்கும் பயணிகள்

ADDED : பிப் 10, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணியால் கோட்டைமந்தையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. நிழற்குடை, குடிநீர், கழிப்பறை வசதிகளின்றி பயணிகள் அவதிக்குள்ளாகும் அவலம் பல மாதங்களாக தொடர்கிறது.

சின்னாளபட்டி பேரூராட்சியில் 2 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப்பிலான இப்பணியில் பஸ்கள் நிறுத்துவதற்கான தனி பிளாட்பாரம், பயணிகள் தங்குமிடம், வணிக வளாகங்கள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இதற்கான திட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டது. சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்கும் பணியில் 2023 ஏப்ரலில் தரைதள உறுதித்தன்மைக்கான மண் பரிசோதனை நடந்தது. செப்டம்பரில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியது. இதில் முந்தைய கட்டடங்களை அகற்றும் பணியில் 8 லட்ச ரூபாயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலே இடித்து அகற்றப்பட்டது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் தற்காலிக பஸ் ஸ்டாண்டிலும் பயணிகள் குடிநீர் கழிப்பறை வசதிகளுக்காக அவதிக்குள்ளாகின்றனர்.

திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளபட்டி விலக்கு சந்திப்பு முதல் பஸ் ஸ்டாண்ட், பேங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணி 2023 ஜனவரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துவங்கியது. 5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் செல்வதற்கான அகலப்படுத்தப்பட்ட வடிகால் வசதியுடன் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. முழுமையாக பணி முடிக்காத சூழலில் வணிக நிறுவனங்களின் முன்பு அசுத்த நீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றுவதில் அலட்சியத்தால் ரோட்டோரங்களில் சாக்கடை நீர் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் வாகன போக்குவரத்தில் நெரிசல், குடிநீர் வழங்கல், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.

இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகளால் நெரிசல்


ஏ.குருசாமி ,முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: கனரக, இருசக்கர, சரக்கு வாகனங்கள் என எந்த நேரமும் கணிசமான அளவில் இத்தடத்தில் போக்குவரத்து இருக்கும். தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ரோடு விரிவாக்கத்தை காரணம் கூறி குடிநீர் வினியோக குழாய்கள் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. மெயின் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி இல்லை. பூஞ்சோலை துவங்கி பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் கபளீகரம் செய்துள்ளன. மாற்று ஏற்பாடு இல்லாத நிலையில் ரோட்டின் அகலத்தை குறைத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. சிறு, குறு தொழில் நடத்தும் வணிகர்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

திறந்த வெளியில் பயணிகள்


நாகஜோதி,குடும்பத் தலைவி, சின்னாளபட்டி : தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிட பகுதியை முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை. காத்திருக்கும் பயணிகளுக்கான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளும் இல்லை. நிழற்குடை வசதி இல்லாத சூழலில் திறந்த வெளியில் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பெண்களுக்கான பாலுாட்டும் அறை இல்லாததால் கைக்குழந்தையுடன் வரும் பயணிகள் பாதிக்கின்றனர். பணி துவங்கி பல மாதங்களாகியும் ஆமை வேகத்தில் நடக்கிறது.

-வீணாகும் அரசு பணம்


திருநாவுக்கரசு ,நெசவு தொழிலாளி, சின்னாளபட்டி: புதுப்பிப்பு பணிகளுக்காக சின்னாளபட்டி கோட்டைமந்தை பகுதிக்கு தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு உள்ளது. விரிவாக்க பணிக்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த 8 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு கழிப்பறை திறக்காமலே இடித்து அகற்றி விட்டனர். அரசு பணத்தை வீணாக்குவதை அலட்சியமாக செயல்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வரும் மகளிர் மட்டும் இன்றி குழந்தைகள்,முதியோர் உள்ளிட்ட பயணிகள் சுற்றுச்சூழலையும், மறைவையும் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர் .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us