ADDED : செப் 10, 2025 08:17 AM
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கொட்டதீர்த்த கனமழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
திண்டுக்கல்லில் கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டேதான் வந்தது.
வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சரியாக பெய்யவில்லை. பகலில் கொளுத்தும் வெயில், மாலைக்கு மேல் அவ்வப்போது பெய்யும் துாரலும் புழுக்கத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணிக்கு லேசான துாரலுடன் பெய்ய தொடங்கிய மழை கனமழையாக கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
பலத்த காற்றும் வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
இது மட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சென்றன.
திருச்சி ரோடு நேருஜி நகர் ரவுண்டானா, மதுரை ரோடு, பழநி ரோடு, கச்சேரி தெரு, ஆர்.எம்.காலனி என ரோடெல்லாம் வெள்ளக்காடு போல் காட்சியளித்தது.
மழையால் லிங்கைய்யர் சந்தில் வீடுகள் கடைகளில் தண்ணீர் புகுந்தது.இது போல் தாய்வான பகுதிகளிலும் வீடுகளில் மழை புகுந்தது.இரவு முழுவதும் துாக்கத்தை தொலைத்து தவித்தனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றிய கிராமப் பகுதிகளில் நேற்று இரவு 7:00 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையை எதிர்பார்த்து மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை விதைக்க தயாராக உள்ள மானாவாரி விவசாயிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
இது போல் வேடசந்துார்,கன்னிவாடி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.