/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இயற்கை பந்தலாய் பள்ளியை மாற்றும் பசுமைப்படை மாணவர்கள்இயற்கை பந்தலாய் பள்ளியை மாற்றும் பசுமைப்படை மாணவர்கள்
இயற்கை பந்தலாய் பள்ளியை மாற்றும் பசுமைப்படை மாணவர்கள்
இயற்கை பந்தலாய் பள்ளியை மாற்றும் பசுமைப்படை மாணவர்கள்
இயற்கை பந்தலாய் பள்ளியை மாற்றும் பசுமைப்படை மாணவர்கள்
ADDED : ஜன 29, 2024 06:22 AM

சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த பசுமையை பராமரிப்பதன் அவசியத்தை குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தும் பணியில் அரசு பள்ளிகளின் பசுமை படை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால், காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்துகிறோம். நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. மாவட்டத்தின் பல்வேறு தனியார் அமைப்புகள், பசுமையை வளப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.
செம்பட்டி காமுபிள்ளைசத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் பசுமைப்படை அமைப்பு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மரக்கன்று வழங்கல், நடுதல், சமூக சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மாணவர், ஏழை பெற்றோருக்கு உதவுதலை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை மாசடைதலிலிருந்து மீட்பதுடன் தொடர்ந்து பாதுகாப்பது அவசியம். இதற்கான விழிப்புணர்வை, மாணவ சமுதாயத்தில் விதைப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முகாம்களை நடத்துகின்றனர். தேசிய பசுமைப்படை சார்பாக பசுமை பள்ளியை உருவாக்க,பள்ளி வளாகத்தில் சுமார் 200 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். ஒரு மாணவனுக்கு ஒரு மரம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கியுள்ளனர்.
அவரவர் இல்லத்தில் வளர்ப்பதற்காக இவை வழங்கப்பட்டு, தொடர் பராமரிப்பு மேற்கொள்வதற்கு ஏற்ப ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அரிதாகி வரும் பனை மர வளர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் சுமார் 2 ஆயிரம் பனை விதைகள் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் குளக்கரைகள், நீர் நிலைகள், வாய்க்கால்கள், பொது இடங்களிலும் மாணவர்கள் மூலம் நடவு செய்யப்படுகிறது. இது தவிர சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் இதற்கு ஏற்ப மாணவர்களிடம் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மூலிகை, காய்கறி, மல்பரி தோட்டம் சிறிய அளவிலான மியாவாக்கி காடு ஆகியவை பள்ளியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு விழா காலத்தின் போதும் பல்வேறு வகையான பசுமை விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மனத்தில் பசுமை சூழல் பராமரிப்பு, நீர் மேலாண்மையின் அவசியம், பாலிதீன் ஒழிப்பின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆர்வம்
பா.விஜய், பசுமை படை ஒருங்கிணைப்பாளர், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி காமுபிள்ளைசத்திரம்: எங்கள் பள்ளி பசுமைப்படை அமைப்பில், 45 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் மூலமாக ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று என்ற திட்டத்தில், பள்ளியில் உள்ள 347 மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைவரும் தங்களின் வீடுகளில் சம்பந்தப்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் சொந்த வீடு மட்டுமின்றி கிராமத்தில் உள்ள குளக்கரைகள், நீரோடை, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகள், பொது இடங்களில் நடுவதற்கு ஏற்ப 2 ஆயிரம் பனை விதைகள் நடவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பட்டு வளர்ப்பு துறை மூலமாக மல்பெரி செடிகள் பெறப்பட்டது. இவை தவிர பள்ளி வளாகத்திற்குள் காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மியாவாக்கி வகை குறுங்காடு பள்ளி வளாகத்தில் உருவாக்கி வருகிறோம். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி வருகிறோம். இதற்கேற்ப வயது வித்தியாசமின்றி அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரோக்கியம் மேம்படும்
அ.சரவணன்,தலைமை ஆசிரியர், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி காமுபிள்ளைசத்திரம் : விளையாட்டு திடலை தவிர, பிற அனைத்து பகுதிகளையும் மரங்களால் மூடி பசுமையான இயற்கை பந்தலை வளாகத்தில் உருவாக்குவது இலக்காக கொண்டு செயல்படுகிறோம். வனத்துறை வழங்கிய 30 மரக்கன்றுகளையும் ஒரே இடத்தில் நடவு செய்து குறு மியாவாக்கி காடு உருவாக்கியுள்ளோம். உலகம் முழுவதும் 150 மரங்கள், பழுத்த நிலையில் மல்பெரி செடிகள் காய்கறி தோட்டம் என பசுமையான சூழல் நிலவுகிறது.
வேம்பு,புங்கன்,அரசமரம் என, இயற்கை நிறைந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
மனதிற்கு இதமான சூழல், இயற்கையோடு இணைந்த காற்று, ரம்மியமான கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சி என மாணவர்களின் சுற்றுச்சூழலை பராமரிப்பதில் இவை பெரிதும் உதவுகின்றன.
விழாக்கள் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மரக்கன்று நடவு செய்து வருகிறோம்.