Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சேதமான ரோடு; வசதிகளில் பின்தங்கிய பாப்பம்பட்டி

சேதமான ரோடு; வசதிகளில் பின்தங்கிய பாப்பம்பட்டி

சேதமான ரோடு; வசதிகளில் பின்தங்கிய பாப்பம்பட்டி

சேதமான ரோடு; வசதிகளில் பின்தங்கிய பாப்பம்பட்டி

ADDED : மே 28, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
கோபால்பட்டி : சாணார்பட்டி கோம்பைபட்டி பகுதியில் 10க்கு மேற்பட்ட கிராமத்தினர் அலைபேசி 'டவர்' இன்றி அலைபேசியை பயன்படுத்த வழி இன்றியும், வாகனங்கள் செல்ல தகுதியற்ற ரோடாலும் தினம் தவித்து வருகின்றனர்.

தகவல் தொடர்பில் '4ஜி 5ஜி' என நவீனத்துவத்தில் விரைவான வளர்ச்சி பெற்றுள்ளதால் ஒரு இடத்தில் இருந்தபடி உலகையே உள்ளங்கைக்குள் வைத்துள்ளனர் மக்கள். வியாபாரம், பணப்பரிமாற்றம், ஆன்லைன் வகுப்பு என அறிவியல் வளர்ச்சியால் தகவல் தொடர்பின் அத்தனை பயனையும் மக்கள் அனுபவித்துவருகின்றனர்.இருந்தும் அலைபேசி பயன்படுத்த வசதியின்றி தனித்தீவாக ஏங்கும் கிராமங்கள் இன்றும் இக்கதான் செய்கின்றன.

சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைபட்டி ஊராட்சியை சேர்ந்தது பெருமாள்கோவில்பட்டி, களத்து வீடு, பாப்பம்பட்டி, கோம்பைப்பட்டி, கடுக்காபட்டி, சரளப்பட்டி, கணவாய்ப்பட்டி, அஞ்சுகுழிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது மலைப்பட்டி, சின்னகாளிபட்டி, படுகைகாடு, கணவாய்பட்டி ஊராட்சியில் கொரசின்னம்பட்டி, சக்கிலியான்கொடை மலை கிராமங்கள் , சிறுமலை பகுதியில் உள்ள இக்கிராமங்களில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு அலைபேசி டவர் இல்லாததால் அலைபேசி உட்பட இணைய வதியை பயன்படுத்த முடியாமல் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

அலைபேசி டவர் வசதி இல்லாததால் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்டவைகளை கூட தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மலை கிராமங்களில் பாப்பம்பட்டி, கடுக்காய் பட்டி, கொரசின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் மோசமாக வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ரோட்டில் உள்ள ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மண் ரோடு போல் காட்சியளிக்கிறது. இந்த ரோட்டில் தினமும் பயணிக்கும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் ,பள்ளி மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

மருத்துவ அவசரத்துக்கும் வழி இல்லை


சி.ஆர்.ஹரிஹரன், கோம்பைப்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், வேம்பார்பட்டி: ஊராட்சியில் 'டவர்' வசதி இல்லாததால் அலைபேசி உட்பட இணைய வசதியை பயன் படுத்த முடியவில்லை. இங்குள்ள 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை.இதற்காக 6 கி.மீ.,க்கு அப்பால் உள்ள அஞ்சுகுழிப்பட்டி, அய்யாபட்டி சென்று படிப்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.விவசாயம், கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள இப்பகுதியில் தகவல் தொடர்பு இன்றி பால், விவசாய பொருட்களை விற்க 10 கி.மீ., நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ அவசரத்துக்கும் இதே நிலைதான். இக்குறைபாடால் பிறகிராமத்தினர் இங்குள்ள ஆண்களின் திருமணத்திற்கு பெண் கொடுக்கவும் தயங்குகின்றனர். தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் அலைபேசி டவர் அமைத்து எங்கள் கிராமங்களில் வசதியை மேம்படுத்த வேண்டும்.

பின்தங்கிய ரோடு


அ.ரமேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர், பாப்பம்பட்டி: மலைப்பட்டி சாலையில் இருந்து பாப்பம்பஎல்லை செல்லும் ரோடு ஜல்லிக்கற்கள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக தகுதியற்ற நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் இதை பயன்படுத்துவோர் விபத்தில் சிக்குகின்றனர்.கோடை மழை பெய்துள்ளதால் ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மாவட்டத்தின் கடைசி எல்லை, மலை கிராமங்களாக உள்ளதால் அரசு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் எதுவும் கிடைப்பதில்லை. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தீர்வு


சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தற்போது வரை அலைபேசி டவர் வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். அதனால் இந்த பகுதிகளில் தனியார், அரசு பி.எஸ்.என்.எல்., டவர் அமைத்து தகவல் தொடர்பு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பம்பட்டி, கொரசின்னம்பட்டி உள்ளிட்ட மலை கிராம ரோடுகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இவைகள் குறைந்தது இரண்டு முதல் ஐந்து கிலோமீட்டர் நீளத்தில் உள்ளது. ரோடு அமைக்க குறைவான நிதி மட்டுமே தேவைப்படுவதால் கிராம சாலை திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கி ரோடுகளை சீரமைக்க உள்ளாட்சிகள் முன் வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us