Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி

ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி

ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி

ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி

ADDED : ஜூன் 21, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி:சின்னாளபட்டி பேரூராட்சியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள், கட்டுப்பாடின்றி கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதில் போலீஸ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

திண்டுக்கல் - -மதுரை நான்கு வழிச்சாலையில் சின்னாளபட்டி விலக்கு சந்திப்பு முதல் பஸ் ஸ்டாண்ட், பாங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணியை 2024 ஜனவரியில் நெடுஞ்சாலைத்துறை துவங்கியது. பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ. 5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் ரோட்டின் இருபுறமும் மழை நீர்,கழிவுநீர் செல்வதற்கான வடிகால் வசதியுடன் ரோடு விரிவாக்கம் நடந்தது. பெயரளவிலே கால்வாய், ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்தது. தெருக்களில் சேகரமாகும் மழைநீர் வாய்க்காலில் தடையின்றி செல்ல போதிய அகலத்தில் அமைக்கவில்லை. ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக பணி முடிந்தபோதும் சாரல் மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தி வருகின்றன. ரோட்டோர கடைகள் முன்பு டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.சின்னாளபட்டி விலக்கில் இருந்து பூஞ்சோலை, தேவாங்கர் பள்ளி ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் டூவீலர்களை வரன்முறையின்றி கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர்.

சின்னாளபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆத்துார், செம்பட்டி செல்லும் போதும் அங்கிருந்து திண்டுக்கல் நோக்கி திரும்பி செல்லும் போதும் இவை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. நெரிசலை காரணம் கூறி அரசு பஸ் ஊழியர்கள் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து செல்கின்றனர். வெகுநேரம் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றத்துடன் தனியார் பஸ்களின் வருகையை எதிர்நோக்கும் அவல நிலை தொடர்கிறது. அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் வாகன போக்குவரத்தில் நெரிசல், குடிநீர் வழங்கல், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு தேவை


குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: கனரக, டூவீலர்கள் என எந் நேரமும் கணிசமான அளவில் இத்தடத்தில் போக்குவரத்து இருக்கும் இங்கு , ரோடு விரிவாக்கம் பணிக்காக ரோட்டின் இருபுறமும் குழிகள் தோண்டி பல மாதங்களாகிறது. இதனால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி இல்லை. போலீஸ், நெடுஞ்சாலை துறையின் கண்காணிப்பு இல்லாததால் பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.

--நெரிசலில் சிக்கி தவிப்பு


வைரமுத்து,த.வெ.க., தொண்டரணி நிர்வாகி, சின்னாளபட்டி : பெரும்பாலான கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. ரோடு விரிவாக்கம் செய்தும் பயனில்லாத சூழல் நிலவுகிறது. டூவீலர் மட்டுமின்றி கனரக வாகனங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி நெரிசல் வாடிக்கையாகிவிட்டது. வணிகர்கள், சரக்கு வாகனங்கள் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் இப்பகுதியில் நடமாடுவதில், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இது போன்ற நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகும் அவல நிலை பல மாதங்களாக தொடர்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us