Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்

தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்

தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்

தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்

ADDED : பிப் 10, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
வடமதுரை: தங்கம்மாபட்டியை விரைவு பஸ்கள் புறக்கணிக்கும் நிலையில் திண்டுக்கல் திருச்சி மாவட்டங்கள் பிரியும் எல்லைப்பகுதியில் உள்ள பல கிராம மக்கள் பஸ் வசதியின்றி பரிதவிக்கின்றனர். இதன்மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யலுார் பேரூராட்சியின் சம்பக்காட்டுபள்ளம்,பொட்டிநாயக்கன்பட்டி, தொட்டியூர், கிணத்துபட்டி, கணவாய்பட்டி, கருஞ்சின்னானுார், சுக்காவளி, முடக்குபட்டி, தங்கம்மாபட்டி, வால்பட்டி, செம்பன்பழனியூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கருணாம்பட்டி, தங்கம்மாபட்டி புதுார், புதுவாடி, மாரியூர் போன்ற கிராமங்களுக்கு பொது போக்குவரத்து வசதிக்கு தங்கம்மாபட்டி பஸ் ஸ்டாப் முக்கிய பங்கு வகிக்கிறது. திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் தங்கம்மாபட்டியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற நிலையில் மக்கள் சிரமமின்றி பயணித்தனர். ஆனால் தற்போது அய்யலுாரில் கூட்டமாக நிற்கும் பயணிகளை ஏற்றி செல்வதில் ஏற்பட்ட போட்டாபோட்டியால் குறைந்த துார தனியார், அரசு விரைவு பஸ்கள் தங்கம்மாபட்டியை புறக்கணிப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

-மக்கள் சிரமப்படுகின்றனர்


வி.கவுரிபாலம்மாள், குடும்பத்தலைவி, தங்கம்மாபட்டி: அய்யலுார் பேரூராட்சியிலும், புதுவாடி ஊராட்சியிலும் தலா ஒரு வார்டு தங்கம்மாபட்டி என்ற பெயரிலேயே உள்ளது. தங்கம்மாபட்டி என்ற பெயரில் 1991 வரை ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு இப்பகுதியினர் திருச்சி, திண்டுக்கல்லிற்கு சென்றனர்.

பஸ் போக்குவரத்து அதிகரித்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் பயன்பாடு குறைந்து மூடப்பட்டது. இரு மாவட்டங்களை சேர்ந்த பல கிராம மக்கள் தங்கம்மாபட்டி பஸ் ஸ்டாப் மூலமே வெளியே செல்கின்றனர். ஆனால் இங்கு ஏற்கனவே நின்று சென்ற பஸ்கள் தற்போது நிற்காமல் செல்வதால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

தனியார் பஸ்களும் குறைவு


எஸ்.ஆனந்தஜோதி, வியாபாரி, தங்கம்மாபட்டி: பல வழித்தடங்களிலும் அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்கள் நடுத்தர கிராமங்களை புறகணிப்பு செய்யாமல் ஏற்றி இறக்கி செல்கின்றன .

இந்த வகையில் வையம்பட்டி, அய்யலுார் இடையே நடுப்பட்டி, கல்பட்டி, கீரனுார் போன்ற கிராமங்களில் தனியார் பஸ்கள் சேவை வழங்குகின்றன. திண்டுக்கல் திருச்சி இடையே இயக்கப்படும் குறைந்த துார அரசு விரைவு பஸ்களும் நின்று சென்றன. ஆனால் இவை தங்கம்மாபட்டியை தற்போது புறக்கணிப்பது மிகுந்த பாதிப்பாக உள்ளது. அதோடு மற்ற வழித்தடங்களை ஒப்பிடுகையில் இவ்வழியில் குறைந்த எண்ணிக்கையிலே தனியார் பஸ்கள் செல்கின்றன. எல்லையில் இருப்பதால் டவுன் பஸ் சேவையும் குறைவாக இருப்பதால் அவதியின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.

-நடவடிக்கை எடுக்க வேண்டும்


கே.காளித்தாய், வியாபாரி, தங்கம்மாபட்டி: தங்கம்மாபட்டி முடக்குபட்டிக்கு அடுத்து திருச்சி மாவட்டப்பகுதிக்குள் தங்கம்மாபட்டி புதுார் உள்ளது. இப்பகுதியினரும் பஸ் வசதிக்கு தங்கம்மாபட்டிக்கே வர வேண்டியுள்ளது. இங்கிருந்தே திருச்சி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலம், மணப்பாறை, வேடசந்துார் தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். விவசாய அலுவலக பணிகளுக்கு வையம்பட்டி, வடமதுரை செல்ல வேண்டும். இதுவரை இப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்கு தங்கம்மாபட்டி பஸ்ஸ்டாப் வழியே வரும் பஸ்கள் மூலமே செல்ல வேண்டும். எல்லையில் இருப்பதால் டவுன் பஸ்கள் குறைவாக உள்ளன. எனவே குறைந்த துார சேவையாக இயக்கப்படும் விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முயற்சி எடுக்கப்படும்


ஓ.பாண்டீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர், அய்யலுார்: பல ஆண்டுகளுக்கு முன் வரை மணப்பாறையிலிருந்து அய்யலுார் வரை 6 டிரிப் இயக்கப்பட்ட டவுன் பஸ் சேவை தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் வேடசந்துாரிலிருந்து வடமதுரை வரை ஒரு டவுன் பஸ்சை இயக்கி, பின்னர் அதை வையம்பட்டி வரை சென்று வரும்படி செய்தால் வடமதுரை வேடசந்துார் இடையேயும், இரு மாவட்டங்களிலும் எல்லையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன் பெறுவர் .

திருச்சி திண்டுக்கல் இடையே இயக்கப்படும் குறைந்த துார அரசு, தனியார் விரைவு பஸ்கள் தங்கம்மாபட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகம் மூலம் தீர்மானம் நிறைவேற்றி போக்குவரத்து துறையினருக்கு அனுப்பி முயற்சி எடுக்கப்படும்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us