/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
கோபால்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்
ADDED : பிப் 06, 2024 07:22 AM

கோபால்பட்டி : கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோடு, நத்தம், திண்டுக்கல் ரோட்டில் சாலையோர கடை, வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது.
கோபால்பட்டியில் இருந்து அய்யாபட்டி செல்லும் ரோடு வழியாக வேம்பார்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி, கோம்பைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இப்பகுதியில் பல்லாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதேபோல் கோபால்பட்டியில் இருந்து பாறைப்பட்டி செல்லும் ரோட்டிலும் பல கிராமங்கள் உள்ளன.இதனால் கோபால்பட்டி மையப் பகுதியாகவும், நகர் பகுதியாகவும் உள்ளதால் பொருட்கள் வாங்க அதிகமானோர் வருவதால் இந்த ரோடு போக்குவரத்து மிகுந்து உள்ளது.
இந்த ரோட்டில் சிலர் கடைகள் அமைத்தும், வாரச்சந்தை கடைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ரோடு இருபுறமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வாகனங்களை அதிக அளவு நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுவதுடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது.
வார சந்தை நாட்களில் ரோடு இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு என உள்ள பகுதியில் மட்டும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. சந்தை கடைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் கோபால்பட்டியில் திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் சாலையின் ஓரம் சேதமடைய ஆபத்தான பள்ளம் உள்ளது.
இப்பள்ளத்தால் இப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஆக்கிரமிப்புடன் பள்ளம்
ஆர்.ரமேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர், வேம்பார்பட்டி: ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளதோடு நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் ஆபத்தான பள்ளம் பல மாதங்களாக உள்ளது. இந்த ரோடு வழியாக பள்ளி வாகனங்கள் உட்பட தினமும் பல நுாறு வாகனங்கள் சென்று வருகிறது.
இப் பள்ளத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது.பல மாதங்களாக உள்ள இந்த ஆபத்தான பள்ளம் அதிகாரிகளின் கண்ணில் படாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
ஆர். குணசேகரன், அ.தி.மு.க., ஒன்றிய ஜெ.பேரவை இணைச் செயலாளர்,செடிப்பட்டி: கோபால்பட்டியில் வார சந்தைக்கு என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். சாலையில் வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதேபோல் கோபால்பட்டி பகுதி ரோட்டில் வாகனங்கள்,ஆட்டோக்கள் அதிகளவு நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் விபத்துக்கள் நடக்கிறது.
ரோடு நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் பாதிக்கின்றனர். இதனால் மருத்துவ அவசரத்திற்காக செல்லும் ஆம்புலன்ஸ் கூட ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.