Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ படரும் ஆகாயத்தாமரை; தண்ணீரை இழக்கும் கரியன்கண்மாய் சின்னாளபட்டி, அம்பாத்துறை நிலத்தடி நீருக்கு ஆபத்து

படரும் ஆகாயத்தாமரை; தண்ணீரை இழக்கும் கரியன்கண்மாய் சின்னாளபட்டி, அம்பாத்துறை நிலத்தடி நீருக்கு ஆபத்து

படரும் ஆகாயத்தாமரை; தண்ணீரை இழக்கும் கரியன்கண்மாய் சின்னாளபட்டி, அம்பாத்துறை நிலத்தடி நீருக்கு ஆபத்து

படரும் ஆகாயத்தாமரை; தண்ணீரை இழக்கும் கரியன்கண்மாய் சின்னாளபட்டி, அம்பாத்துறை நிலத்தடி நீருக்கு ஆபத்து

ADDED : ஜூலை 24, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி அம்பாத்துறை ஊராட்சி பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமான கரியன்குளம் ஆக்கிரமிப்புகளால் துார்ந்து வருகிறது. பரவி வரும் ஆகாயதாமரை செடிகளால சொற்ப தண்ணீரும் வீணாகும் அவலம் நீடிக்கிறது.

ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை அருகே சின்னாளபட்டி ரோட்டில் உள்ள கரியகவுண்டன் குளம் நாளடைவில் மருவி கரியன் குளமாக அழைக்கப்படுகிறது. சிறுமலையில் உருவாகும் வரத்து நீர் தொப்பம்பட்டி கண்மாய் வழியே இங்கு வந்தடைகிறது. இங்கு தேங்கும் தண்ணீர் அம்பாத்துறை ஊராட்சி, சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் 15 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகும்.

இதனை பராமரிக்க அதிகாரிகளோ, உள்ளாட்சி நிர்வாகத்தினரோ முன்வருவதில்லை. அரசு துறைகளின் அலட்சியத்தால் இதற்கான நீர் வழித்தடங்கள் மட்டுமின்றி குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளால் சிக்கி பரப்பளவில் குறைந்து வருகிறது. சுற்றிய குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர் மட்டுமே கண்மாயின் வரத்து நீராக மாறி உள்ளது. இதன் விளைவாக சிறுமலையில் இருந்து வரும் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. சமீபத்திய மழையால் சேகரமான காட்டாற்று தண்ணீர் இக்கண்மாயை சில மாதங்களுக்கு முன் நிரப்பியது. சுற்றிய ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

வேதிப்பொருட்களின் கலப்பால் சில வாரங்களுக்கு முன் மீன்கள் முழுவதுமாக இறந்து மிதந்தன. இவற்றை அகற்றியபோதும் ஆக்கிரமிப்புகள் இருந்து கண்மாய் ,நீர்வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கைகள் கிடப்பில் உள்ளன. அதிகரித்து வரும் வெப்பச் சூழல் காரணமாக தேங்கிய தண்ணீரின் அளவு குறைய தொடங்கியது.

இச்சுழலில் கண்மாயில் பரவி வரும் ஆகாயதாமரை செடிகளால் தேங்கியுள்ள சொற்ப நீரும் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பராமரிப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் இப்பகுதி நீர் ஆதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் உருவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் இக்கண்மாயை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--நீராதாரம் பாதிப்பு


பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி : மேலக்கோட்டை ரோட்டில் செல்வோர் மட்டுமின்றி, இப்பகுதியில் வசிப்போரும் துர்நாற்றத்துடன் வீசும் காற்றை சுவாசிக்க வேண்டியுள்ளது. அசுத்த நீர் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம் நிலவுகிறது. கரையோரப் பகுதிகளில் குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர். தண்ணீர் வரத்துக்கான வழித்தடத்தை ஆக்கிரமிப்புகளால் மறைத்து விட்டனர். குறுகிய ஓடை வழியே சொற்ப அளவு காட்டாற்று நீர் கரியன் குளத்திற்கு வந்தது. விஷமிகளின் சதியால் தற்போதுஆகாயதாமரை செடிகள் பரவி வருகிறது.இச் செடிகள் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இவற்றால் கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரின் பெருமஅளவு வீணாக வாய்ப்புள்ளது.

தடம் மாற்ற வேண்டும்


சவுந்தரராஜன் ,நெசவுத் தொழிலாளி, சின்னாளபட்டி : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கண்மாய் குளியல், குடிநீர் ஆதாரங்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாளடைவில் இப்பகுதியினர் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுகள் கொட்டுமிடமாக மாற்றின . ஆகாய தாமரை செடிகளால் தேங்கியுள்ள தண்ணீரில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அசுத்த நீரை அம்பாத்துறை ரோட்டில் செல்லும் சாக்கடையுடன் இணைத்து வெளியேற்ற வேண்டும். ஊராட்சி நிர்வாகம், சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகங்கள் இணைந்து தன்னார்வலர்கள் மூலம் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

சாக்கடை கண்மாய்


மருதமுத்து,பா.ம.க., நிர்வாகி, சின்னாளபட்டி : அம்பாத்துறை ஊராட்சிக்கு இக்கண்மையில் உள்ள 1 கிணறு, 3 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இது தவிர சின்னாளபட்டி பேரூராட்சியின் 9, 10 வார்டுகளில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் தண்ணீர் ஆதாரமாக இக்கண்மாய் உள்ளது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, பாலிதீன், மருத்துவ கழிவுகளை கண்மாய் கிணற்றில் கொட்டி மூடி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கிணறு புதர் மண்டி கிடைக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளே குப்பை குவித்தல், கழிவுநீர் சேர்த்தலில் தாராளம் காட்டியதால் கரியன் கண்மாய் சாக்கடை நீர் மட்டும் தேங்கும் அவலத்தில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us