/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்
பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்
பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்
பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூலை 16, 2024 04:54 AM

வடமதுரை ; வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.
வடமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். திருச்சி மார்க்கத்தில் செல்லும் விரைவு பஸ்களின் சேவை இரவு, பகல் கிடைக்கிறது.
இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் நாளுக்கு நாள் சிரமங்கள் அதிகரிக்கிறது. 1998, 2003ல் வடமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தற்போது 21 ஆண்டுகளாகியும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை.
இதனால் பலரும் போட்டியிட்டு நெடுஞ்சாலை இடங்களில் ஆக்கிரமித்து மக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்கின்றனர். தற்போதைய பஸ் ஸ்டாப் பகுதியில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தற்போது ரோடு விளிம்பு வரை வந்துவிட்டது.
சில இடங்களில் தார் ரோட்டின் மீது மண் கொட்டியும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பஸ் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சில கடைக்காரர்கள் தங்கள் வியாபாரம் பாதிப்பதாக கூறி ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகளையும் விரட்டும் கொடுமையும் இங்கு நடக்கிறது. இதை கருதி வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--தடுமாறி விழும் அபாயம்
என்.ரத்தினவேல், நிறுவனர், ஸ்ரீ பேசும் பாலமுருகன் மடாலய அறக்கட்டளை, ஆண்டியப்பட்டி:வடமதுரையில் பள்ளிகள் விடும் நேரங்களில் மாணவர்கள் ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் குவிகின்றனர். போதிய இடமில்லாததால் ரோடு விளிம்பில் பாதுகாப்பின்றி நிற்கின்றனர். நெருக்கடியில் ஆபத்தான முறையில் பஸ் ஏறும் நிலை உள்ளது.
இதை தவிர்க்க ஏராளமான மாணவர்கள் திண்டுக்கல் ரோடு சந்திப்பு, திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி, காணப்பாடி ரோட்டில் போலீஸ் நிலையம் என முந்தைய பஸ் நிறுத்தங்களுக்கே பிரிந்து சென்று நிற்கின்றனர்.
திண்டுக்கல் ரோடு சந்திப்பு பகுதிக்கு செல்லும் மாணவர்கள் பஸ் வரும் வகையில் அருகில் கிடக்கும் மரத்துண்டுகளின் மீது விளையாடுகின்றனர். அங்கு விஷப்பூச்சிகளாலும், தடுமாறி விழுந்து காயமடையும் ஆபத்தும் உள்ளது.
-தள்ளி கொண்டே செல்கிறது
ஜி.ராமச்சந்திரன், சமூக ஆர்வலர், ஜி.குரும்பபட்டி: 2016ல் ஒரு சமூக நல அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு தரப்பட்டது. இதனடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நத்தம், வேடசந்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக 2017ல் ஆக்கிரமிப்புகள் கணக்கீடு பணி நடந்தது. பின்னர் 2019 லோக்சபா தேர்தல், 2020 கொரோனா தொற்று பிரச்னை, 2021 சட்டசபை, 2022 நகர்புற உள்ளாட்சி, 2024 லோக் சபா தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களால் ஓட்டு வங்கி அரசியல் காரணங்களால் இப்பணி நடக்காமல் தள்ளி கொண்டே செல்கிறது.
இதனால் மக்கள், மாணவர்களது அவதி தொடர்கிறது. இப்பகுதியில் அசாம்பவிதம் நடந்தேறும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.