ADDED : ஜூன் 04, 2024 06:15 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலையில் வாழை, பலாப்பழம், எலுமிச்சை, ஏலக்காய், சவ் சவ் போன்றவை பயிர் செய்யப்பட்டு வருகிறது. சிறுமலை மூலிகை செடிகள் நிறைந்த வனப்பகுதி என்பதால் இங்கு விளையக்கூடிய அனைத்து பழங்கள், காய்கறிகளும் கூடுதல் சுவை நிறைந்ததாக இருக்கும். இதனால் மார்க்கெட்டில் சிறுமலை பழங்கள், காய்கறிகளுக்கு என்று தனி மவுஸ் உண்டு.
சிறுமலையில் விளையக்கூடிய காய்கறிகளை திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வர் . சிறுமலையில் 100 ஏக்கருக்கு மேல் சவ்சவ் விவசாயமும் நடக்கிறது.
தற்போதைய மழையின் காரணமாக சவ்சவ் செடிகளில் நோய் தாக்குதலால் அழுகி வீணாகிறது. இதன் காரணமாக விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு 30 முதல் 50 சிப்பங்கள் வரை கிடைக்கும் நிலையில் மழையின் காரணமாக 5 முதல் 10 சிப்பங்களே கிடைத்து வருகிறது.
இதனால் மார்க்கெட்டில் சவ்சவ்க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் 45 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் சவ்சவ் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை ஆகும் நிலையில் தற்போது விளைச்சல் குறைவால் ஒரு சிப்பம் ரூ 2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனை ஆகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கூட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறினர்.