Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி

சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி

சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி

சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி

ADDED : ஜூன் 22, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: சாக்கடை வசதி இல்லாத தெருக்கள்,பாதியுடன் நிற்கும் ரோடுகள் என காவேரியம்மாபட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.

காவேரியம்மாபட்டி, குரும்பபட்டி, ராயகவுண்டன்புதுார், இறையகவுண்டன்புதுார், அணைப்பட்டி , அத்தப்ப கவுண்டன்புதுார் கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியின்

பல தெருக்களில் சாக்கடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீர் ஓடுகிறது. சில தெருக்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பல தெருக்கள் இன்னும் மண் தரையுடன்தான் காட்சி அளிக்கிறது. கரட்டுப் பகுதியில் சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடுகள் பாதியுடன் நிற்கிறது. தெருக்களுக்கு சிமென்ட் ரோடு ஏற்படுத்த வேண்டும். காவேரியம்மாபட்டி பெரிய குளத்திற்கு விருப்பாச்சி பெருமாள் குளம் நிரம்பி மறுநாள் செல்லும்போது நீர் வரும். வரும் வழியில் தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்கு கரைகளை பலப்படுத்த வேண்டும். ஊராட்சி பெரியது என்பதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு தரைமட்ட தொட்டி கட்ட வேண்டும். நீர் வரத்து கால்வாய்களில் கூடுதல் தடுப்பணை கட்ட வேண்டும்.

குரும்பபட்டி, அணைபட்டியில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.

ராயகவுண்டன்புதுாரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் இல்லாமல் உள்ளது. அத்தப்பகவுண்டன்புதுாரில் சாக்கடை இன்றி மக்கள் தவிக்கின்றனர். பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. விரிவாக்க பகுதிகளில் ரோடு தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது ஊராட்சி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

வரத்து கால்வாயை சீரமையுங்க


பழனிமுத்து, விவசாயி: பெருமாள்குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழிப் பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்டால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் தென் பகுதியில் செல்லும் ரோடை சீரமைக்க வேண்டும். இங்குள்ள பல தெருக்கள் மண் ரோடுகளாக உள்ளன.

பள்ளங்கள் நிறைந்த ரோடால் சிரமம்


கிருஷ்ணசாமி, விவசாயி காவேரியம்மாபட்டி: புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து காவேரியம்மாபட்டி செல்லும் பழைய ரோடு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. கிராம சபை கூட்டங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பக்கத்து ஊராட்சிகளில் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதிகள் செய்துள்ளனர். ஆனால் இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

கழிவு நீர் கால்வாய் தேவை


மணிவேல், விவசாயி, காவேரியம்மாபட்டி: தெருக்களில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களை உலர வைக்க உலர்களம் அமைப்பதும் அவசியம். பழுதான தெரு விளக்குகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சேதமான ரோடுகளை சீரமைக்காமல் இருப்பதால் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. அரைகுறையாக நிற்கும் தெரு ரோடுகளை முழுமையாக அமைக்க வேண்டும்.

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்


பெருமாளம்மாள், ஊராட்சி தலைவி: மற்ற ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் இந்த ஊராட்சி புறக்கணிக்கப்படுகிறது. 2020--21ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ .85 லட்சம் நிதியை ரத்து செய்து விட்டனர்.

அத்தப்ப கவுண்டன் புதுாரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு சாக்கடை கட்ட முடியாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு மட்டும் நிதி ஒதுக்குகின்றனர். ஊராட்சியின் வரி வசூலை கொண்டு தெருவிளக்கு, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வது பெரிய சவாலாக உள்ளது.

ஊராட்சியில் உள்ள பழைய குழாய்களை மாற்றி அமைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராயகவுண்டன்புதுாரில் கீழ்மட்ட தொட்டி கட்டி குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.பொது சேவை மையத்திற்கு சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது. அணைப்பட்டியில் சொந்த செலவில் புதிய போர்வெல் அமைத்துள்ளேன். தன்னார்வலர்கள் உடன் இணைந்து ஊராட்சியை பசுமையாக மாற்ற 2000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us