/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓட்டல் உரிமையாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுங்க ஓட்டல் உரிமையாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுங்க
ஓட்டல் உரிமையாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுங்க
ஓட்டல் உரிமையாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுங்க
ஓட்டல் உரிமையாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்றுங்க
ADDED : ஜூலை 07, 2024 02:54 AM
திண்டுக்கல்: ''ஓட்டல் உரிமையாளர்களை சட்ட விரோத செயல்களிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு சட்டம் உருவாக்க வேண்டும்'' என, திண்டுக்கல் மாவட்ட ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் ராஜ்குமார் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் தனியார் உணவகத்தில் சில தினங்களுக்கு முன் தனிநபர் ஒருவர் அத்துமீறி சமையலறைக்குள் நுழைந்து கெட்டுப்போன பழைய இறைச்சியை கொண்டு உணவு தயார் செய்வதாக தனது அலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்து அதனைக் கொண்டு கடை உரிமையாளரிடம் பணம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். எஸ்.பி., அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளித்திருந்தோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் உணவகங்களை மூடி அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.
அதன்பின்னும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தமிழ்நாடு ஹோட்டல் அசோசியேசன் சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்படும்.
இதே போல் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் ரூ.50,000 பணம் கேட்டு ஒருவர் மிரட்டினார்.
அண்மைக்காலமாக ரவுடிகள், சமூக விரோதிகள் உணவகங்களில் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உணவகங்கள்,ஓட்டல் உரிமையாளர்களை சட்ட விரோத செயல்களிலிருந்து பாதுகாக்க ஒரு சட்டத்தை உருவாக்கி அமல்படுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்.
கொடைக்கானலில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து உணவகங்கள் மூடும் நிலையில் உள்ளது. ஆதலால் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
செயற்குழு உறுப்பினர் சண்முகம், சங்க செயலாளர் வெங்கடேஷ், துணைத் தலைவர் கென்னடி இணைச் செயலாளர் காளிதாஸ் உடன் இருந்தனர்.