Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்

ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்

ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்

ஹாயாக சுற்றும் மாடுகள்... கொட்டமடிக்கும் கொசுக்கள் தினம் திணறலில் திண்டுக்கல் 3வது வார்டு மக்கள்

ADDED : ஜூன் 02, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: சேதமான ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகள்,இரவு மட்டுமல்லாது பகல் நேரத்திலும் கடித்து குதறும் கொசுக்கள்,மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்,பயன்படாத தண்ணீர் தொட்டி,புகாரளித்தாலும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் என பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 3வது வார்டு மக்கள்.

ஆர்.எம்.காலனி 1,2,3,4 குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் எண்ணற்ற பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள சேதமான ரோடுகளால் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். டூவீலர்களிலும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் வேறு பாதையை மாற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். இவைகள் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் எப்போதாவது கால்நடைகளை பிடிக்கின்றனர். மீண்டும் அவைகள் அதே இடத்தில் ஹாயாக சுற்றுகின்றன. இரவு மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் கடிக்கும் கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிக்கின்றனர். கொசு வலைகளை பயன்படுத்தினாலும் தப்பிக்க முடியாத நிலை உள்ளது. கொசு மருத்து அடிக்க வரும் ஊழியர்களும் ஒரு சில இடங்களில் கடமைக்கு அடித்து விட்டு செல்கின்றனர். கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எந்நேரமும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தெரு நாய்கள் ரோட்டோரங்களில் சுற்றுகின்றன. சில நேரங்களில் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் இரவில் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்த போதிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை. என்ன செய்வது என தெரியாமல் அப்பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மக்கள் பிரச்னைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு வேண்டும்


வீரம்மாள்,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: எங்கள் தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் இருக்கும் குடிநீர் தொட்டியால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எந்த வாகனமும் தெருக்களுக்குள் வர முடியாமல் தவிக்கிறோம். அதிகாரிகளிடம் புகாரளித்த போதிலும் நடவடிக்கை இல்லை. எங்கள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசு மருந்து அடியுங்க


முத்துலட்சுமி,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்குகிறது. பல முறை புகாரளித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு ரோடு முழுவதும் கழிவுநீர் குளம்போல் ஓடுகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும். கொசுவை கட்டுப்படுத்த வாரம் இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.

கால்நடைகளை பிடிக்கலாமே


பிரேம்குமார்,4வது குறுக்கு தெரு,ஆர்.எம்.காலனி: 3 வது வார்டை சுற்றிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமலிருப்பதால் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ரோட்டில் குழந்தைகள்,வயதானவர்கள் நடமாடவே முடியவில்லை. அந்த அளவிற்கு மாடுகள் மக்களை அச்சுறுத்துகிறது. இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரமாக வைத்துள்ளேன்


இந்திராணி,கவுன்சிலர், (தி.மு.க.,): என் வார்டு மக்களை நல்ல முறையில் கவனித்து கொள்கிறேன். எந்த குறையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொடுக்கிறேன். சாக்கடைகளில் முறையாக துார்வாரப்படுகிறது. சேதமான ரோடுகளை சீரமைக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் சீரமைக்கப்படும். ரேஷன் கடை,சமுதாயக்கூடம் என் வார்டுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன். வார்டை சுகாதாரமாக வைத்துள்ளேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us