Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ --பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்

--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்

--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்

--பெயரளவில் கூட அடிப்படை வசதிகள் இல்லை சஞ்சய் காந்தி நெசவாளர் காலனியில் நீடிக்கும் அவலம்

ADDED : மார் 27, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி: கலிக்கம்பட்டி அருகே கோட்டைப்பட்டி சஞ்சய் காந்தி காலனியில் போதிய ரோடு, தெருவிளக்கு, சாக்கடை வடிகால் வசதிகள் இல்லை. இங்கு வசிப்போர் மட்டுமின்றி கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் பாதிக்கின்றனர்.

ஆத்துார் ஒன்றியம் கலிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி அருகே சஞ்சய் காந்தி நெசவாளர் காலனி உள்ளது. நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பாக 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை இங்கு அடிப்படை வசதிகள் கண்டு கொள்ளப்படாத சூழல் நிலவுகிறது. முன்பிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் புறக்கணிப்பு மனப்பான்மையால் ரோடு, தெருவிளக்கு, சாக்கடை , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகும் நிலை தொடர்கிறது.உள்ளாட்சி நிர்வாகங்களில் அலட்சியம் மட்டுமின்றி வளர்ச்சித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சூழலில் தொற்று பாதிப்பு, விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாய சூழல் நிலவுகிறது.

மழைநீர், கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. சில இடங்களில் அசுத்த நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது.சில குடியிருப்புகளில் நிலத்தடி உறிஞ்சும் குழிகள் அமைத்துள்ளனர். தவளை நடமாட்டம் அதிகரித்து பாம்பு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் அவல நிலை உள்ளது. அங்கன்வாடிக்கு குழந்தைகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. டூவீலர்களில் வருவோர் தவறி விழும் பரிதாப சூழல் தொடர்கிறது.இப்பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளனர்.

ரோடு வசதி இல்லை


முருகன், கூலித்தொழிலாளி, சஞ்சய் காந்தி காலனி: மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டை பலமுறை புதுப்பித்துள்ளனர். ஆனால் கோட்டைப்பட்டியில் இருந்து சஞ்சய் காந்தி நெசவாளர் காலனிக்கு வரும் ரோடு 20 ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. கற்கள் பெயர்ந்து குழந்தைகள், முதியோர் நடமாட முடியாத அளவில் சேதம் அடைந்துள்ளது. நெசவாளர் குடியிருக்கும் காலனிக்கு மட்டும் தார் ரோடு வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு மனம் இல்லை. கலிக்கம்பட்டி ஊராட்சியின் சஞ்சய் காந்தி நெசவாளர் காலனி தனித்து விடப்பட்ட தீவு போன்று புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்


இந்திராணி, குடும்பத் தலைவி, சஞ்சய் காந்தி காலனி : குடியிருப்போர் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் இதுவரை சாக்கடை வசதி செய்து தரவில்லை. பல இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோடு, சாக்கடை, தெருவிளக்கு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர். போக்குவரத்து, குடிநீர் வசதிக்காக சிரமப்படுவது மட்டுமின்றி விஷ பூச்சிகளால் அடிக்கடி பலர் பாதிப்படையும் அவலம் தொடர்கிறது.

கொசுத்தொல்லை தாராளம்


அன்னபூரணி, குடும்பத் தலைவி, சஞ்சய் காந்தி நெசவாளர் காலனி : குடியிருப்புகளின் நுழைவுபகுதி முதல் கோட்டைப்பட்டி வரை தார் ரோடு உள்ளது. ஆனால் குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் ரோடு வசதி இல்லை. ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் அடிப்படை வசதிகளை வழங்குவதில் பாராமுகமாக உள்ளனர். இப்பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால், பாம்புகள், பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பகல் நேரங்களிலும் கொசு, வண்டு, பூச்சி தொல்லை உள்ளது.

தண்ணீருக்காக தவிப்பு


நவீனா ,குடும்ப தலைவி, கோட்டைப்பட்டி காலனி : 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்குதியில் வசிக்கிறோம். 4 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரத்திற்கும் குறைவான தண்ணீர் வினியோகம் நடக்கிறது. போதிய தண்ணீர் கிடைக்காமல் சமையல், குடிநீர், சலவை உபயோகங்களுக்காக ஒவ்வொரு குடும்பமும் அவதிக்குள்ளாகும் அவலம் நீடிக்கிறது. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த போதும் அங்கன்வாடிக்காக கோட்டைப்பட்டி, செட்டியபட்டி போன்ற பிற இடங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இங்கு புதிதாக அங்கன்வாடி மையம் ஏற்படுத்த வேண்டும்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us