/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பெண் தொழில் முனைவோருக்கு 30சதவீதம் மானிய கடன் பெண் தொழில் முனைவோருக்கு 30சதவீதம் மானிய கடன்
பெண் தொழில் முனைவோருக்கு 30சதவீதம் மானிய கடன்
பெண் தொழில் முனைவோருக்கு 30சதவீதம் மானிய கடன்
பெண் தொழில் முனைவோருக்கு 30சதவீதம் மானிய கடன்

வாழ்ந்து காட்டுவோம் செயல்பாடு...
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் அரசு சார்பில் ஊரக வளர்ச்சி ,ஊராட்சித்துறை மூலம் 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஆத்துார், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், பழநி, வேடசந்துார், குஜிலியம்பாறை ஆகிய 7 வட்டாரங்களைச் சார்ந்த 148 ஊராட்சிகளில் 2019 நவம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கம்...
தனிநபர் தொழில் முனைவுகள், குழு தொழில் முனைவுகள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றை கிராம பகுதிகளில் உருவாக்குதலும், மேம்படுத்துதலும் தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கவும், மேம்படுத்தவும் தலா ரூ.75,000 வீதம் துவக்க நிதி வழங்கப்படுகிறது. உற்பத்தியாளர் கூட்டமைப்புகளின் விரிவாக்கத்திற்கும் மானிய தொகை வழங்கப்படுகிறது. கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி , வேளாண்மை விரிவாக்கத்திற்கு பண்ணைப் பள்ளிகள் அமைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கிராம இளைஞர்களுக்கு திறன் தொழில் பயிற்சி வழங்கவும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும் திறன் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மானியம் எப்படி வழங்கப்படுகிறது
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட செயல் அலுவலரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள வட்டார அளவிலான தேர்வுக்குழுவின் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வங்கிகள் , நிதி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பயனாளிகள் கடன் தொகையினை தவணை தவறாமல் செலுத்தும்பட்சத்தில் மானியத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கடன் கணக்கு நேர் செய்யப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.tnrtp.org என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கியாளர்களுக்கு இத்திட்டம் குறித்து திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணை மானிய திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் விவரம் ...
திட்டம் செயல்படும் 148 ஊராட்சிகளில் குறைந்தபட்சம் 2 தொழில் முனைவோர் வீதம் 302 தொழில் முனைவோர்கள் இணை மானிய திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை பயனடைந்துள்ளனர். 16 தொழில் முனைவேர்கள் ரூ.5 முதல் ரூ.30 லட்சம் வரையிலும், உற்பத்தியாளர் நிறுவனம் ரூ.1.40 கோடி இணை மானிய நிதி திட்டத்தில் பயனடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரூ.30 லட்சத்திற்கு மேல் தொழில் திட்ட நிதி தேவை உள்ள பெண் தொழில் முனைவோர் 30 சதவீதம் இணை மானிய நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மதி சிறகுகள் தொழில் மையத்தினை அணுகலாம்
தொழில் முனைவுகளை உருவாக்கும் விதம்...
முதலில் ஒரு கிராமத்தில் என்ன தொழில் இருக்கிறது. விவசாயம், மாடு வளர்ப்பு, தோட்டக்கலை போன்ற பண்ணை சார்ந்த , பண்ணை சாரா தொழில்களால் கார்மென்ட்ஸ் வரை என்னென்ன என்பதை முதலில் கண்டறிந்து, பின்னர் குழுக்களை உருவாக்கி மக்கள் பங்கேற்பு வளர்ச்சித் திட்டத்தின் படி பயிற்சி அளித்து தொழில் முனைவுகளை உருவாக்குகிறோம்.
உற்பத்தியாளர் குழு அமைவது எப்படி...
ஒரு உற்பத்தியாளர் குழு என்பது உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு கிராமம், ஊராட்சி அளவில் அமைக்கப்படும். ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும் முதன்மை உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தி திறனை நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக அதிகப்படுத்தி மதிப்புகூட்டி நேரடியாக சந்தைப்படுத்துதல் மூலம் வருமானத்தை அதிகரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிதாக ஆரம்பிக்கப்படு உற்பத்தியாளர் குழுவிற்கு துவக்க நிதியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மதி சிறகுகள் மையத்தின் சேவைகள்
முதலில் தொழில்முனைவோரை கண்டறிந்து அவருக்கு ஏற்ற தொழிலையும் கண்டறிந்து தேவையான ஆலோசனை வழங்கப்படும். பின்னர் தொழில் திட்ட அறிக்கை தயார் செய்து திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதிபெற ஏற்பாடு செய்யப்படுகிறது. அதேபோல் புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதல், தேவைக்கு ஏற்ப திறன் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வங்கி கடன் வரை மையம் வாயிலாக பெற்றுத்தரப்படுகிறது. இது தவிர உணவு பாதுகாப்பு , தர நிர்ணயம், ஜி.எஸ்.டி., தொழில் சார்ந்த சான்றிதழ்கள், பான் கார்டு பதிவு போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது என்றார்.