/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் டாக்டர் இல்லாததால் வருவதில்லை நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் டாக்டர் இல்லாததால் வருவதில்லை
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் டாக்டர் இல்லாததால் வருவதில்லை
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் டாக்டர் இல்லாததால் வருவதில்லை
நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் டாக்டர் இல்லாததால் வருவதில்லை
ADDED : ஜூன் 07, 2025 01:08 AM
அரூர்,கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குதல், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், மருந்து வழங்கல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்வுக்கான நடவடிக்கைகள் வழங்குவதற்காக, இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வானத்தில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுனர் பணியில் இருப்பர். இந்த வாகனம் திங்கள் முதல், சனிக்கிழமை வரை காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்படும் கிராமங்களில் சிகிச்சை பணி செய்வார்கள். மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 1962 அவசர அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அழைப்புகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்குவர். ஞாயிறு அன்று மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 1962 என்ற அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மட்டும் மேற்கொள்வர். இந்நிலையில், அரூர் பகுதியில் கடந்த, 5 வாரங்களாக கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் கிராமங்களுக்கு வருவதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்க தலைவர் திருமலை கூறியதாவது:
அச்சல்வாடி, ஒடசல்பட்டி, வாச்சாத்தி ஆகிய கிராமங்களுக்கு கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வந்தது. இதன் மூலம், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த, 5 வாரங்களாக ஆம்புலன்ஸ் வாகனம் வருவதில்லை. இது குறித்து, 1962 அவசர அழைப்பு மையத்திற்கு போன் செய்தால், டாக்டர் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை எனக் கூறுகின்றனர். தர்மபுரி மாவட்ட கால்நடை துணை இயக்குனரிடம் கேட்டாலும் தகவல் இல்லை. ஆம்புலன்ஸ் வாகனம் வரும் என்ற நம்பிக்கையில், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மாடுகளை பிடித்து வந்து, பல மணி நேரமாக காத்திருக்கின்றனர். பின், வாகனம் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.