Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஓசூரில் பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு

ஓசூரில் பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு

ஓசூரில் பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு

ஓசூரில் பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு தொழில்துறையினர் வரவேற்பு

ADDED : ஜூன் 28, 2024 01:40 AM


Google News
ஓசூர், ஓசூரில், 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்திருப்பதை, ஓசூர் பகுதி தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

தமிழக சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஓசூருக்கு புதிய பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆண்டுக்கு, 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்' என, அறிவித்தார்.

இந்த அறிவிப்பை ஓசூர் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

வி.ஞானசேகரன், 56, டான்ஸ்டியா சங்க செயற்குழு உறுப்பினர்;

ஓசூர் உலக அளவில் வேகமாக வளரும் நகரத்தில், 13 வது இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து செல்வதற்கு விமான சேவை இல்லாதது வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. தொழில்கள் வளர்ச்சியடைய, சாலை வசதி, ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து ஆகியவை மிகவும் முக்கியமானது. சாலை போக்குவரத்து நன்றாக உள்ளது. விமான போக்குவரத்து இல்லாமல் உள்ளது. ஓசூரில் விமான சேவை கொண்டு வர வேண்டும் என்பது தொழில்முனைவோரின் வெகுநாள் கோரிக்கையாகும். அதேயேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பன்னாட்டு விமான சேவையை அறிவித்தது, ஓசூர் நகரின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

கே.வேல்முருகன், 50, ஓசூர் தொழில் வர்த்தக சபை தலைவர்;

பன்னாட்டு விமான சேவை கொண்டு வரப்பட்டால், ஓசூரில் உள்ள இரு, நான்கு சக்கர வாகன தொழிற்சாலைகள், எலெக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், 3,000 க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் பயனடையும். பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கும். விமான சேவைக்காக ஓசூர் பகுதி மக்கள் பெங்களூருவை நம்பியிருந்ததால், நமது வரி வருவாய் கர்நாடகா மாநிலத்திற்கு சென்றது. ஓசூரில் விமான சேவை வந்தால், தமிழகத்திற்கு வரி வருவாய் அதிகரிக்கும்.

எஸ்.மூர்த்தி, 58, ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் (ஹோஸ்டியா) சங்க தலைவர்;

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தொழில்துறை மட்டுமின்றி, மலர்கள், கிரானைட் தொழில், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்கள் விரிவடையும்.

கே.ராமலிங்கம், 67, கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க தலைவர்:

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது சற்று கடினமான காரியம். உதான் திட்டத்தில் ஏற்கனவே மத்திய அரசு விமான சேவை கொண்டு வருவதாக கூறியிருந்தது. அத்திட்டத்தின் மூலம் விமான சேவை கொண்டு வருவது சாத்தியம். அதனால் அதற்கு தமிழக அரசு பெங்களூரு விமான நிலையத்துடன் பேசி முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us