ADDED : அக் 05, 2025 01:19 AM
தர்மபுரி, புரட்டாசி மாதம், 3வது சனிக்கிழமையையொட்டி, பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி அடுத்த மணியம்பாடி, வெங்கடரமண சுவாமி தங்கக்கவச அலங்காரத்திலும், தர்மபுரி டவுன் கடைவீதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி வெள்ளி கவச அலங்காரத்திலும், லளிகம் சென்றாய பெருமாள், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் என, மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
அன்னக்கூட உற்சவம்
தர்மபுரி டவுன் கடைவீதியிலுள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில் நேற்று, திருப்பாவாடை சேவை எனும், 'அன்னக்கூட உற்சவம்' நடந்தது. இதில், 50 கிலோ புளியோதரை, 50 கிலோ இனிப்பு, 50 கிலோ பழங்கள் கொண்டு பெருமாள் உருவம் செய்து, மஹா நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. நேற்று மாலை கருடசேவை உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது.
* அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல், மொரப்பூர் சென்ன
கேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அரூரில் பூ மாலைகளின் விலை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்றன.


