/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சொந்த செலவில் 9 ஏரிகளை ஆற்று நீரால் நிரப்பிய மக்கள் சொந்த செலவில் 9 ஏரிகளை ஆற்று நீரால் நிரப்பிய மக்கள்
சொந்த செலவில் 9 ஏரிகளை ஆற்று நீரால் நிரப்பிய மக்கள்
சொந்த செலவில் 9 ஏரிகளை ஆற்று நீரால் நிரப்பிய மக்கள்
சொந்த செலவில் 9 ஏரிகளை ஆற்று நீரால் நிரப்பிய மக்கள்
ADDED : செப் 16, 2025 12:36 AM

அரூர்; தர்மபுரி அருகே கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில், தென்பெண்ணையாற்றில் இருந்து ஒன்பது ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டி ஊராட்சி பகுதியில், 10 ஏரிகள் உள்ளன. தென்பெண்ணையாற்றில் மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரி நீரை, ஏரிகளில் நிரப்ப மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், கிராம மக்கள், தங்கள் சொந்த செலவில், நீரேற்று திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இத்திட்டத்தின் படி, பஞ்., நிர்வாகம் ஒத்துழைப்போடு, பொதுமக்கள், முதல் கட்டமாக சமூக ஆர்வலர்களிடம், 14 லட்சம் ரூபாய் நிதி வசூலித்தனர்.
தென்பெண்ணையாற்றின் கரையோரம், சிறு கிணறு வெட்டி, உபரி நீரை ஜெனரேட்டர் வைத்து, 400 மீட்டர் துாரத்திலுள்ள தேசபந்தன் பெரிய ஏரியில் நிரப்பினர். இதற்காக, நீரேற்று குழாய்கள் பெரிய ஏரி வரை பதிக்கப்பட்டன. மற்ற ஏரிகளுக்கும் குழாய் அமைத்து, தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.
கடந்த 25 நாட்களில், எட்டு ஏரிகளில் தண்ணீர் நிரப்பிய நிலையில், நேற்று, 3 கி.மீ., துாரத்திலுள்ள, ஒன்பதாவது ஏரிக்கும் தண்ணீரை கொண்டு வந்தனர். ஊர் மக்கள், விவசாயிகள் ஏரிக்கு வந்த நீரை மலர் துாவி வரவேற்றனர். இப்பணிகளுக்காக இதுவரை, 30 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர்.
சமூக ஆர்வலர் மாதேஸ்வரி மணி கூறுகையில், ''மாம்பட்டியில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு, மாம்பட்டி ஏரிகளுக்கு, தென்பெண்ணையாற்றில் இருந்து தண்ணீரை நிரப்பி உள்ளோம். தற்போது குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது,'' என்றார்.