ADDED : செப் 22, 2025 02:02 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர் மாரியம்மாள், 80. கணவனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி. உடன் பிறந்தவர்கள், 12 பேரில், ஒரு சகோதரர் மட்டும் உள்ளார். அவரும் வயதாகி விட்டதால், மாரியம்மாளை கவனிக்கவும், கண்டு கொள்ளவும் யாரும் இல்லை. இதனால் தனக்கு வரும், முதியோர் உதவித்தொகையை வைத்து வாழ்கிறார். தர்மபுரி மெயின் ரோட்டில் சாலையோரம் தனியார் நுாற்பாலை பகுதியில், கழிவுநீர் கால்வாய் அருகே தங்கி, மழை, வெயிலில் கொசுக்கடியில் சிரமப்பட்டு வருகிறார்.
இது குறித்து, மூதாட்டி மாரியம்மாள் கூறியதாவது: என்னுடன் பிறந்தவர்கள் மற்றும் மகள் ஆகியோர் இறந்து விட்டனர். என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. வசதியாக வாழ்ந்த நான், தற்போது வாழ வழியின்றி உள்ளேன். இயற்கை உபாதை கழிக்க முடியாத நிலையில் உள்ளேன். இதை தவிர்க்கவே, மூன்று வேளையும் டீ மட்டும் குடித்து வருகிறேன். வழிபோக்கர்கள் கொடுப்பதை சாப்பிடுகிறேன். உடல்நிலை பாதித்து ஆதரவற்று கிடக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பலமுறை கேட்டும், கிடைக்கவில்லை. இருக்க இடமும், சாப்பிட அரிசி, பருப்பு வழங்கி, மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.