/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
ADDED : மே 21, 2025 02:00 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களில் உள்ள, 6,250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால், நேற்று கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து, 4,208 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், வரும் நாட்களில் கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனிடையே தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களான சந்திராபுரம், குமாரம்பட்டி, நாரியம்பட்டி, வேடியப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தேவையின்றி தென்பெண்ணையாற்றில் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்.