ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில், 37 மி.மீ., மழையளவு பதிவானது.தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பலத்த காற்றுடனும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்தது. சில மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் பாய்ந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில், 37, பென்னாகரம், 29, தர்மபுரி, 12, ஒகேனக்கல், 11, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூரில் தலா, 2 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.