ADDED : ஜூன் 13, 2024 07:03 AM
அரூர் : அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதுாரில், குடிநீர் வழங்க கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி புதுாரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு காலை நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.
அது தங்களுக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், போதியளவில் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு காலிக் குடங்களுடன் அரூர்-கடத்துார் சாலையில், ஆண்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த பஞ்., நிர்வாகத்தின் மற்றும் அரூர் போலீசார் ஒரு வாரத்திற்குள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 9:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.